Published : 17 Jun 2017 08:39 AM
Last Updated : 17 Jun 2017 08:39 AM

சவுதியில் சித்ரவதை அனுபவித்த இந்திய பெண்: வாட்ஸ்-அப் மூலம் வீடியோ அனுப்பியதால் மீட்கப்பட்டார்

குடும்பத்தின் வறுமையை தீர்ப்பதற்காக சவுதி சென்ற ஆந்திர பெண் சித்ரவதைக்கு ஆளான விவகாரம் அவர் அனுப்பி வைத்த வாட்ஸ்-அப் காணொலி மூலம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தெலங்கானா போலீஸார் எடுத்த நடவடிக்கையால் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஆந்திராவின் கடப்பா மாவட் டத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி(40). கணவரின் உடல்நிலை பாதிக்கப் பட்டதால், தனது 3 குழந்தைகளை காப்பாற்றுவதற்காக துபாய் செல்ல முடிவெடுத்தார். இதற்காக 2 ஏக்கர் நிலத்தை அடகு வைத்து, ரூ.80 ஆயிரத்தை திரட்டி தரகர்களிடம் கொடுத்துள்ளார்.

அவர்களும் துபாயில் கை நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காண்பித்து, அவரை ரியாத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளனர்.

இதை அறியாமல், குடும்பத்தின் வறுமையை தீர்த்துவிடலாம் என்ற கனவுடன் ரியாத் சென்ற சுப்புலட்சுமியை, அங்கிருந்தவர்கள் கழிவறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். தப்பிச் செல்ல முடியாமல் தவித்த சுப்புலட்சுமிக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் அனுப்பினால் உடனடியாக பரவிவிடும் என தனது மகள் கூறியது நினைவுக்கு வந்தது. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த ஒரு மொபைல் போனை எடுத்து தனது நிலையை காணொலி மூலம் விளக்கி, அதை உறவினர்களுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த தகவல் தெலங்கானாவின் வாரங்கல் மாவட்ட ஆட்சியரான அமர்பல்லிக்கு தெரியவந்தது.

இதையடுத்து சுப்புலட்சுமியை மீட்க அவர் விரைவாக நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி மாவட்ட எஸ்பி இஸ்மாயில் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. அவர்கள் சுப்புலட்சுமியை ஏமாற்றிய தரகர்களை பிடித்து விசாரணை நடத்தி ரியாத்தில் எங்கு அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை தெரிந்து கொண்டனர். பின்னர் ரியாத்துக்கு சென்று சுப்புலட்சுமியை பத்திரமாக மீட்டு, மீண்டும் கடப்பாவுக்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து சுப்புலட்சுமி கூறும் போது, ‘‘நான் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி, எனது குழந்தை களையும், கணவரையும் சந்திப் பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. என் மகள் கூறியபடி வாட்ஸ்-அப் பயன்படுத்தியதால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளேன். ஆசை காட்டி ஏமாற்றும் இத்தகைய தரகர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x