Published : 03 Oct 2013 07:55 AM Last Updated : 03 Oct 2013 07:55 AM
மாகாண கவுன்சிலுக்கு முழு அதிகாரம்: இலங்கை கிழக்கு மாகாணத்தில் தீர்மானம்
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13-வது சட்டத் திருத்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி முழுமையான அதிகாரங்களை மாகாண கவுன்சில்களுக்கு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டின் கிழக்கு மாகாண கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் முகமது ஜமீல், கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தார். அப்போது மொத்தமுள்ள 37 உறுப்பினர்களில் 17 பேர் மட்டுமே அவையில் இருந்தனர். பின்னர், வாக்கெடுப்பு நடைபெற்றபோது இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் எதிர்த்து வாக்களித்தார். இதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி கொண்டு வரப்பட்ட 13-வது சட்டத்திருத்தத்தின்படி மாகாண கவுன்சிலுக்கு முழுமையான அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மத்தியிலும், கிழக்கு மாகாணத்திலும் அதிபர் ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாகாண கவுன்சிலுக்கு உள்ள நிலம், காவல் துறை தொடர்பான அதிகாரங்களை பறிக்கும் வகையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜபக்ச அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற வடக்கு மாகாண கவுன்சில் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் இதுபோன்றதொரு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தால் பெரிய அளவில் மாற்றம் ஏதும் ஏற்படாது என்றாலும், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
WRITE A COMMENT