Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM
நடிகை நக்மாவை உ.பி.யில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து `தி இந்து'விடம் பேசிய நக்மா, தாம் அக்கட்சியின் போர்வீரர் எனவும், தம்மை எங்கு போட்டியிடக் கூறினாலும் தயாராக இருப்ப தாகவும் கூறியுள்ளார்.
நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு முதன் முறையாக போட்டியிட்டு வென்ற உ.பி.யின் பூல்பூர் தொகுதியில் நக்மாவை நிறுத்த திட்டமிட்டு இருந்தது காங்கிரஸ். ஆனால், ‘நேரு வென்ற தொகுதியில் நடிகை நக்மாவா?’ என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்பதால் தவிர்க்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, அங்கு நிறுத்தப் பட்டுள்ள கிரிக்கெட் வீரர் கைப் பூல்பூரை சேர்ந்தவர் என்பதால், வாய்ப்பு அவருக்கு போனது. எனவே, உ.பி.யின் மேற்குப் பகுதியில் நக்மா போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை `தி இந்து'விடம் உறுதி செய்தார் நக்மா.
இது பற்றி நக்மா கூறுகையில், ‘நான் பல ஆண்டுகளாக மும்பை நகரில் குடியிருப்பதால், மகராடஷ்ட் ராவில் போட்டியிட விரும்பியது உண்மைதான். ஆனால், என்னை விட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இங்குள்ள தொகுதிகளில் திறமையாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே, என்னை உ.பி.யில் போட்டியிட வைக்க காங்கிரஸ் தலைமை விரும்புவதாக நானும் கேள்விப்பட்டேன். இது குறித்து இறுதி முடிவை அறிந்துகொள்ள நானும் மிக ஆர்வமாக இருக்கிறேன்.
எனக்கு தமிழகத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். ஏனெ னில், தற்போது நான் ஒன்பது மொழிகளில் நடித்தாலும், திரையுலகில் என்னை வரவேற்று அங்கீகரித்தது தமிழகம்தான். ஆனால், நம் நாட்டில் மிகவும் முக்கியமாகக் கருதப்படும் உ.பி. மாநிலத்தில் போட்டியிட்டு வெல்வது என்பது கவுரவமான விஷயம். எனக்கு அங்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் பெருமையாகக் கருதுவேன் எனத் தெரிவித்தார்.
கடந்த 2004-ல் காங்கிரசில் இணைந்த நக்மா, இரண்டாவது முறையாக அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். மறைந்த இந்தி நடிகர் சுனில்தத்திற்கு பிறகு, இந்த பதவியில் இருக்கும் ஒரே திரை நட்சத்திரம் இவர்தான். மற்றொரு உறுப்பினரான நடிகரும், ஆக்ராவின் எம்பியுமான ராஜ்பப்பர், சமாஜ்வாடி கட்சியில் இருந்து வந்தவர்.
மேலும், நக்மா காங்கிரசிற்காக செய்த பிரச்சாரங்களில், உ.பி.யில் மட்டும் மிகவும் அதிகமாக சுமார் 150 தேர்தல் கூட்டங்கள் நடத்தியுள்ளார். அதேசமயம், கடந்த இரண்டு தேர்தல்களிலும் நக்மாவை மகராஷ்ட்ராவில் போட்டியிட வைக்க காங்கிரஸ் திட்டமிட்டு, கடைசிநேரத்தில் தவிர்த்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT