Published : 22 Nov 2013 03:21 PM
Last Updated : 22 Nov 2013 03:21 PM

பாலியல் வன்கொடுமை புகார்: தேஜ்பால் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு

தன்னிடம் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட, 'தெஹல்கா' இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது கோவா காவல் துறை இன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இது தொடர்பான விசாரணைக்காக, குற்றப் பிரிவு போலீஸ் குழு டெல்லி அனுப்பிவைக்கப்படும் என்று கோவா டிஜிபி கிஷன் குமார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில், தருண் தேஜ்பால் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தன்னிடம் பணியாற்றிய பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக, தெஹல்கா இதழ் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர், சமூக நல பெண் அமைப்புகளை அணுகிய பிறகு புதன்கிழமை விவரம் தெரியவந்தது. இதைத் தொடர்ச்சியாக, கோவா மாநில போலீஸார் தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, இது குறித்து தருண் தேஜ்பால், தெஹல்காவின் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரிக்கு ஒரு ஈமெயில் அனுப்பியுள்ளார். அதில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் பத்திரிக்கையாளரிடம் தாம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக, தான் மேலும் பிராயச்சித்தம் தேட தான் கடமைப் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள தேஜ்பால், தனது ஆசிரியர் பதவியிலிருந்து 6 மாதங்களுக்கு விலகி இருக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், இதில் திருப்தியடையாத பெண் பத்திரிகையாளர், அலுவலகத்தில் முறையான பாலியல் குற்றத் தடுப்புக் குழுவை அமைத்து தன் வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரியிருக்கிறார்.

இதற்கிடையே, நிர்வாக ஆசிரியரான ஷோமா சௌத்ரி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசி முடித்தாகிவிட்டது. இதற்காக, தருண் தேஜ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரும் திருப்தி அடைந்துள்ளார்' எனக் கூறியுள்ளார்.

இந்தப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம், நவம்பர் 5 முதல் 10-ம் தேதி வரை கோவாவின் ஐந்து நட்சத்திர ஓட்டலில், 'யோசனை விழா' என்ற பெயரில் தெஹல்கா நடத்திய கூட்டத்தின்போது நடந்துள்ளது. எனவே, கோவாவின் காவல்துறை கண்காணிப்பாளரான பிரியங்கா, சம்பவம் நடந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு கடிதம் எழுதி கண்காணிப்பு கேமிராவின் பதிவுகளை கேட்டிருக்கிறார்.

இது சம்பவத்திற்கான முக்கிய சாட்சியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினையில் சம்மந்தப்பட்டவர்களால் பறிமாறிக்கொள்ளப்பட்ட ஈமெயில்களையும் கோவா போலீஸ் ஆராய இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x