Published : 28 Sep 2013 10:42 PM
Last Updated : 28 Sep 2013 10:42 PM

பிரதமர் தன்மானம் இருந்தால் பதவி விலக வேண்டும்: வெங்கய்ய நாயுடு

தன்மானம் இருந்தால் பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

பெங்களூரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த அவர் கூறியது:

அவசர சட்டம் தொடர்பாக ராகுல் காந்தி மிகுந்த ஆவேசமாகவும், அவமரியாதையாகவும் கருத்து தெரிவித்து இருக்கிறார். தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றுவதற்காகவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்படுவதாக அவரே ஒப்புக் கொள்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்தச் சட்டத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என ஆவேசமாகப் பேசி இருக்கிறார். இது ஒட்டுமொத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவையையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. எனவே, பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். தன்மானம் இருந்தால் அவர் நிச்சயம் பதவி விலகுவார்.

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் அவசர சட்டம் ஊழல் புரிந்த தனது அமைச்சர்களையும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்களையும் கூட்டணி கட்சி தலைவர்களையும் குறிப்பாக லாலு பிரசாத்தையும் காப்பாற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகிறது. வருகின்ற மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணிக்கு ஏற்றவாறு சட்டங்களை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது. இதில் முழுக்க முழுக்க அரசியல் கலந்திருக்கிறது. இதுவரை ஊழல் முறைகேடுகளில் சிக்கித் தவித்த‌ மத்திய அரசு இப்போது சட்ட முறைகேடுகளிலும் சிக்கி இருக்கிறது என்பதை காங்கிரஸின் துணைத் தலைவரான ராகுல் காந்தியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மத்திய அரசு அரசியல் ஆதாயத்தோடு எந்த மாதிரியான சட்டங்களை கொண்டு வந்தாலும் நாடு முழுவதும் எழுந்திருக்கும் நரேந்திர மோடியின் ஆதரவு அலையை தடுக்க முடியாது என்றார் வெங்கய்ய நாயுடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x