Published : 31 Mar 2014 10:27 AM
Last Updated : 31 Mar 2014 10:27 AM
தேர்தல் கருத்துக் கணிப்பை நாங்கள் தடை செய்ய முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று மத்திய தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
தற்போதைய சட்ட விதிகளின்படி வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே தேர்தல் அறிவிக்கை வெளியான நாள் முதல் கடைசி கட்ட தேர்தல் முடியும் வரை கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டே பரிந்துரை செய்திருந்தது. இதற்கு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தில், தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கும் வகையில் சட்டத்தில் சில மாற்றங்களை செய்யுமாறு கோரியிருந்தது. ஆனால் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆணைய வட்டாரங்கள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் சார்பில் ஆணையத்திடம் அண்மையில் முறையிடப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக பதில் அளித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய சட்ட அமைச்சகம் சில நாட்களுக்கு முன்பு அனுப்பிய பரிந்துரை கடிதத்தில், சட்டப் பிரிவு 324-ஐ பயன்படுத்தி கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்குமாறு ஆணையத்திடம் கோரியது.
அதற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் கருத்துக் கணிப்பை தனிப்பட்ட முறையில் நாங்கள் தடை செய்ய முடியாது இதுதொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றுவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று கூறியுள்ளது.
பிரிவு 324-ன் கீழ் தேர்தல் கருத்துக் கணிப்பை தடை செய்வது சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கு சட்டத்தின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே அணுகுமுறையை கருத்துக் கணிப்புக்கும் கடைப்பிடிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிப்பது என்பது நீண்டகால தேர்தல் சீர்திருத்த நடைமுறைகளில் ஒன்றாகும். இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் புதிதாக சட்டம் இயற்ற முடியாது என்று தெரிவித்தார்.
எனவே வரும் மக்களவைத் தேர்தலில் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்படாது என்று தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT