Published : 18 Jun 2016 02:34 PM
Last Updated : 18 Jun 2016 02:34 PM

இந்திய பொருளாதார வளர்ச்சியால் அண்டை நாடுகளும் பலனடைய வேண்டும்: மோடி பேச்சு

இந்திய பொருளாதார வளர்ச்சியால் அண்டை நாடுகளும் பலனடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "இந்திய பொருளாதார வளர்ச்சியால் அண்டை நாடுகளும் பலனடைய வேண்டும்" என்றார்.

இந்திய நிதி உதவியினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தை காணொளி காட்சி மூலம் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர் மோடி பேசும்போது, "கடந்த ஆண்டு நான் இலங்கை சென்ற போது யாழ்ப்பாண மக்கள் என்னை அன்போடு வரவேற்றது மறக்க முடியாத சம்பவம் ஆகும். யாழ்ப்பாணம் துரையப்பா மைதானம் வெறும் செங்கல் மற்றும் மணலால் கட்டப்பட்ட அல்ல. இந்திய-இலங்கை இரு நாட்டின் ஒருங்கிணைப்பு, உத்வேகம் மற்றும் பொருளாதார வளர்ச்சிகளின் அடையாளம் ஆகும். சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நாவில் இந்தியா கோரிக்கை வைத்த போது இலங்கைதான் முதன் முதலில் ஆதரவளித்தது. இந்தியா இலங்கையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளது. இந்திய பொருளாதார வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

இதற்கு பதிலளித்த சிறிசேனா "இந்தியா - இலங்கை நட்புறவைப் பேணுவதில் உறுதியாக இருக்கிறோம். தவறான புரிதல்களால் அவ்வப்போது சில கசப்புகள் ஏற்பட்டாலும்கூட இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தில் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்கா, துணைத் தூதர் என். நடராஜன், இலங்கை வடமாகாண கவர்னர் பளிஹக்கார உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கை வடமாகாண மாணவர்களின் யோகா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

துரையப்பா மைதானம் சில தகவல்:

இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள பொது விளையாட்டு மைதானமான துரையப்பா விளையாட்டு மைதானம், அனைத்து விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் நிகழ்வுகளை நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் துரையப்பா விளையாட்டு மைதானம் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருந்ததால் விளையாட்டுத் தேவைக்கு தகுந்த முறையில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இந்த மைதானத்தை புனரமைப்பு செய்வதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்து, புனரமைப்பிற்குத் தேவையான 14.5 கோடி ரூபாயை (இலங்கை மதிப்பில்) ஒதுக்கீடு செய்தது.

யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் யோகா செய்யும் இலங்கை வட மாகாண மாணவர்கள்

அதனை தொடர்ந்து கடந்த 27.08.2014 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான பணிகள் துவங்கின. இதில் தற்போது இரண்டு பக்க பார்வையாளர் அரங்குகள், புதிதாக 400 மீட்டர் நீளம் உடைய தடகள பாதை, தானியங்கி நீர் தெளிப்பான், மழை நீர் கால்வாய்கள், கழிப்பறை உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x