Published : 02 Apr 2014 12:00 AM
Last Updated : 02 Apr 2014 12:00 AM
நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் குடும்ப வழி வாரிசு அரசியல் அசைக்க முடியாத வகையில் வேரூன்றி வருவது சந்தேகமின்றி உறுதியாகி இருக்கிறது. பல்வேறு கட்சிகளில் உள்ள தலைவர்களின் மகள்கள், மகன்கள் என சுமார் 50 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல், வருண் என வாரிசுகள் பட்டியல் நீள்கிறது. குடும்ப வழி அரசியல் வாரிசுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மையான அளவில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி (இப்போது எம்பியாக இருக்கிறார்), மேற்கு வங்க மாநிலம் ஜாங்கிபூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார், ராகுல் காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியிலும், சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.
மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியை பிலிபிட் தொகுதியிலும் அவரது மகன் வருணை சுல்தான்பூரிலும் நிறுத்தி இருக்கிறது பா.ஜ.க. தமிழ்நாட்டின் சிவகங்கை தொகுதியில் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி முதல் முறையாக களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் ஜார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக் தொகுதியில் போட்டியிடுகிறார். தற்போது இந்த தொகுதி எம்.பி.யாக இருக்கிறார் யஷ்வந்த் சின்ஹா.
மறைந்த மாதவ் ராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர் ஆதித்ய சின்ஹா மத்தியப்பிரதேசம் மாநிலம் குணா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தற்போது எரிசக்தித்துறை இலாகா (தனி பொறுப்பு) இணை அமைச்சராக இருக்கிறார். காலம் சென்ற ஜிதேந்திர பிரசாதாவின் மகன் ஜிதின் பிரசாதா உத்தரப் பிரதேச மாநிலம் தவ்ரஹ்ரா தொகுதியில் நிற்கிறார்.
மகாராஷ்டிரத்திலிருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்வாகி யுள்ள முன்னாள் அமைச்சர் முரளி தேவ்ராவின் மகன் மிலிண்ட் தெற்கு மும்பை தொகுதியில் நிற்கிறார். இந்த தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் மிலிண்ட் மத்திய அமைச்சராக இருக்கிறார்.
கேரள ஆளுநரும் டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் கிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிற்கிறார். ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் மகன் தீபேந்தர் ரோஹ்டக் தொகுதியில் போட்டியிடுகிறார். அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோயின் மகன் கவுரவ், கலியாபர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். சத்தீஸ்கரில் முதல்வர் ரமண் சிங்கின் மகன் அபிஷேக் ராஜ்நந்த்காவூன் தொகுதியில் நிற்கிறார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலாவர் தொகுயில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த நடிகருமான சுனில் தத்தின் மகள் பிரியா மகாராஷ்டிர மாநிலம் மும்பை வட மத்திய தொகுதியில் நிற்கிறார்.
சிட்டிங் எம்பியான பிரியாவை எதிர்த்துப் போட்டியிடுபவர் பூனம் மகாஜன். பாஜக முன்னாள் தலைவரும் மத்திய அமைச்சரு மான மறைந்த பிரமோத் மகாஜனின் மகள் பூனம். உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் மகன் ராஜ்வீர் சிங் பாஜக டிக்கெட்டில் எடா தொகுதியில் களம் காண்கிறார்.
டெல்லி முன்னாள் பாஜக முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் பர்வேஷ் வர்மா மேற்கு டெல்லியில் போட்டியிடுகிறார். காங்கிரஸ், பாஜக போன்ற பெரிய கட்சிகளில் மட்டும்தான் வாரிசு அரசியல் இருப்பதாக கூற முடியாது. பிராந்திய கட்சிகளிலும் இந்த போக்கு அதிகரித்து காணப்படுகிறது.
பிஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு மகள் மிசா பாரதி பாடலிபுத் திரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.பிஹார் ஜமூய் தொகுதியில் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் போட்டியிடுகிறார்.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கௌடாவின் மகன் எச்.டி.குமாரசாமி சிக்கபல்லாபூர் தொகுதியிலும், தேவ கௌடா ஹாசன் தொகுதியிலும் நிற்கின்றனர். கர்நாடக முன்னாள் முதல்வர் மறைந்த பங்காரப்பாவின் மகன் கீதா சிவராஜ்குமார் ஷிமோகா தொகுதியில் நிற்கிறார்.
மகாராஷ்டிரத்தில் வேளாண் அமைச் சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவாரின் மகள் சுப்ரியா பாராமதி தொகுதியில் நிற்கிறார். தமிழகத்தில் பா.ம.க. தலைவர் ராமதாஸின் மகன் அன்புமணி தருமபுரி தொகுதியில் நிற்கிறார்.இதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தன் போட்டி யிடுகிறார்.
மறைந்த மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம் (சேலம்) முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுவின் மகன் அருள் அன்பரசு (ஸ்ரீபெரும்புதூர்) ஆகிய வாரிசுகளும் காங்கிரஸ் சார்பில் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT