Published : 20 Feb 2014 08:55 PM
Last Updated : 20 Feb 2014 08:55 PM
மாநிலங்களவையில் வியாழக் கிழமை தாக்கல் செய்யப்பட்ட தெலங்கானா மசோதா கடும் அமளிக்கு நடுவே நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியிருப்பதன் மூலம் நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயமாகி உள்ளது.
தெலங்கானா மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறை வேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த மசோதா மாநிலங்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா மீதான விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தொடங்கிவைத்தார். அப்போது சீமாந்திரா பகுதி உறுப்பினர்கள் அவரை சூழ்ந்து நின்று கோஷமிட்டனர். தொடர் கூச்சல் குழப்பத்தால் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
மசோதா மீதான விவாதத்தில் பேச எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லிக்கு அவைத் தலைவர் அனுமதி அளித்தார். ஆனால் அவையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் அவரால் பேச முடியவில்லை.
இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக் கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் குவிந்து கோஷமிட்டனர். ஒரு உறுப்பினர் கருப்புக் கொடியை அசைத்தார். அவர்களுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் குரல் எழுப்பினர்.
அப்போது அவையை நடத்திய பி.ஜே.குரியன் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்து, நீங்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்கிறீர்கள். அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபடும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அதன் பின்னரும் அமளி நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அவை நேரம் நீட்டிப்பு
பின்னர் பிற்பகலில் அவை மீண்டும் கூடியது. மசோதா மீது விவாதம் நடத்துவதற்காக அவையின் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி பேசியபோது, தெலங்கானா போன்று உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரத்தையும் பிரிக்க வேண்டும் என்று கோரினார்.
எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி பேசியபோது, தெலங்கானா மசோதா ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது, இதற்கு மத்திய அரசின் அணுகுமுறையே காரணம் என்று குற்றம் சாட்டினார். பாஜக மூத்த தலைவர்கள் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரும் மத்திய அரசை குற்றம் சாட்டி பேசினர்.
பிரதமர் அறிவிப்பு
மசோதா மீதான விவாதத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ராயலசீமா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும். இதற்காக 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கப்படும். கிருஷ்ணா நதியில் போலவரம் அணைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்களும் தெலங்கானா மசோதாவின் நகலை கிழித்தெறிந்தனர்.
உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே பேசியபோது, சீமாந்திரா பகுதிக்கான சிறப்பு அந்தஸ்து 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று உறுதியளித்தார்.
மசோதா நிறைவேறியது
இதன்பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக பேசிய அவர், நான் காங்கிரஸ்காரனாக இருந்தாலும் ஒருங்கிணைந்த ஆந்திரத்தையே விரும்புகிறேன். எனவே இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்தார்.இறுதியில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பாஜக ஆதரவுடன் ஆந்திர மறுசீரமைப்பு மசோதா நிறைவேறியது.
29-வது மாநிலமாக தெலங்கானா உதயம்
மக்களவையிலும் மாநிலங் களவையிலும் மசோதா நிறை வேற்றப்பட்டிருப்பதால் நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா உதயமாகி உள்ளது.
ஆந்திரத்தில் 23 மாவட்டங்கள் உள்ளன. இதில் அடிலாபாத், கரீம்நகர், கம்மம், மகபூப் நகர், மேடக், நல்கொண்டா, நிஜாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல், ஹைதராபாத் ஆகிய 10 மாவட்டங்கள் தெலங்கானா மாநிலத்துடன் இணைக்கப்படுகின்றன.
இப்போதைய தலைநகர் ஹைதராபாத் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக இருக்கும். இதர ஆந்திரப் பகுதிக்கு புதிய தலைநகரைத் தேர்ந்தெடுக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT