Last Updated : 27 Oct, 2014 09:37 AM

 

Published : 27 Oct 2014 09:37 AM
Last Updated : 27 Oct 2014 09:37 AM

ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பணப்பட்டுவாடா காசோலையாக மட்டுமே வழங்க வேண்டும்: தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெற்று செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளது மத்திய அரசு.

ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பணம் பட்டுவாடா செய்யும்போது அதை காசோலையாகவோ அல்லது வங்கி வரைவோலையாகவோ (டிடி) மட்டுமே வழங்க வேண்டும் என தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள், கடந்த 2009-லிருந்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக வருடாந்திர வரவு செலவு கணக்கு விவரத்தை தாக்கல் செய்யவில்லை என ஆய்வில் தெரியவந்தது. இந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்நிய நன்கொடை (ஒழுங்குபடுத்தும்) சட்டத்தின் (2010) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களின் ஆவணங்கள் மற்றும் கணக்குகளை ஆய்வு செய்ததில், பல தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் மூலம் பெற்ற நிதியை பெருமளவில் ரொக்கமாக எடுத்து செலவு செய்திருப்பது தெரியவந்தது.

தொண்டு நிறுவனங்கள், வங்கிகள் மூலம் வரும் அந்நிய நன்கொடை நிதியை ரொக்கமாக செலவு செய்வதற்கு வரம்பு விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

இந்நிலையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும்போது, அந்தத் தொகையை குறுக்குக் கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை உள்துறை அமைச்சக இணை செயலர் ஜி.கே.துவிவேதி பிறப்பித்துள்ளார்.

கடந்த 2009-ல் இருந்து தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆந்திரத் தில் 1441, உத்தரப் பிரதேசத்தில் 1167, தமிழகத்தில் 1108, மகாராஷ் டிரத்தில் 990, கர்நாடகத்தில் 821, மேற்குவங்கத்தில் 748, பிஹாரில் 655, ஒடிஸாவில் 643, கேரளத்தில் 538, டெல்லியில் 400, குஜராத்தில் 378, ஜம்மு காஷ்மீரில் 38, அசாமில் 130 என சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வருடாந்திர கணக்கு விவரத்தை தாக்கல் செய்யவில்லை.

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிபெறும் பல தொண்டு நிறுவனங்கள், நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு எச்சரித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x