Published : 11 Oct 2014 01:28 PM
Last Updated : 11 Oct 2014 01:28 PM
குழந்தைகள் உரிமைகளை பேணுவதற்கு நோபல் பரிசு ஒரு திருப்புமுனையாக அமையும் என சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார்.
இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர்.
2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பெறுவது கைலாஷ் சத்யார்த்திக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை தந்திருக்கலாம். ஆனால், கடந்த 2006-ம் ஆண்டும் இந்தப் பரிசுக்காக சத்யார்த்தி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அந்த வருடம் வங்கதேசத்தின் முகமது யூனுஸ் அமைதி நோபல் பரிசை பெற்றார்.
குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான சர்வதேசப் போராட்டம், குழந்தைக் கல்வியை வலியுறுத்தும் உலகளாவிய பிரச்சாரம் ஆகிய இரண்டையும் கட்டமைப்பவராக திகழும் சத்யார்த்தி உலகம் முழுவதும் 144 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டாற்றியுள்ளார். ஒவ்வொரு நாட்டில் தான் சந்தித்த ஒவ்வொரு குழந்தையுமே தனக்கு மிகவும் நெருக்கமானவரே என அவர் தெரிவித்துள்ளார். அமைதி நோபல் பரிசு, குழந்தைகளுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 16.5 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் இந்தியாவில் மட்டுமே 6.5 கோடி பேர் உள்ளனர்.
விருது பற்றி சத்யார்த்தி கூறியதாவது: இந்தப் பரிசுக்குப் பின் உள்ள அர்த்தத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும். இரு நாட்டு அரசாங்கங்களால் மட்டுமல்ல, இரு நாட்டு மக்களாலும் உற்று நோக்கப்பட வேண்டும். குழந்தைகள் அமைதியான சூழலில் பிறந்து, அமைதியான சூழலில் வாழ வேண்டும். தங்கள் குழந்தைப் பருவத்தை ஒவ்வொரு குழந்தையும் மனமாற அனுபவிக்க வேண்டும். அமைதியற்ற குழந்தைப் பருவம் மிகப் பெரிய சாபம். 'அமைதி'யின் அடிப்படை கோட்பாட்டை நாம் அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது" என்றார்.
மத்தியப் பிரதேசத்தின் விதிசா மாநிலத்தில் தனது பள்ளிக்கூட வாசலில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் படிக்காமல் செருப்பு தைக்கும் பணியில் ஈடுப்பட்டதை பார்த்ததே சத்யார்த்திக்கு வேதனை அளித்த முதல் சம்பவம். சில குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்காகவும், சில குழந்தைகள் வேலைக்குச் செல்வதற்காகவும் ஏன் பிறந்துள்ளனர் என்ற கேள்வி அவர் மனதை முள்ளாக தைத்துள்ளது.
இந்தக் கேள்விதான், பின்னாளில் அவரை மின் பொறியாளர் பணியை உதறிவிட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை துவக்க உந்தியுள்ளது. 1980-ல் 'பச்பன் பச்சாவோ அந்தோலன்' (Save the Children Movement) என்ற அமைப்பை உருவாக்க வகை செய்துள்ளது. 'பச்பன் பச்சாவோ அந்தோலன்' தொடங்கப்பட்ட நாள் முதலாக, கொத்தடிமைகளை மீட்பது, குழந்தைத் தொழிலாளர் முறைய ஒழிப்பது, குழந்தை கடத்தலை தடுப்பது இதுவே இவரது பணியாக உள்ளது.
குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்குவதை அரசியல் சாசனத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் அவர் பெரும் பங்கு வகித்திருக்கிறார். அதன் விளைவாக 2009-ல் அனைத்து குழந்தைகளும் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை அரசியல் சாசன சட்டமானது.
ஐ.நா.வின் அங்கமான யுனஸ்கோ அமைத்து 'அனைவருக்கும் கல்வி' திட்டத்தின் உயர்மட்ட குழுவில் சத்யார்த்தி உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் பிரதமர், அதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுன் தான், சத்யார்த்திக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் முதலில் வாழ்த்து தெரிவித்தவராவார்.
தெற்காசியாவில், குழுந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படாமல் உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1994-ம் ஆண்டு ருக்மார்க் ( இப்போது குட் வீவ் என அழைக்கப்படுகிறது) என்ற சமூக அடையாளத்தை ஏற்படுத்தினார். ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, மைகா சுரங்கங்கள், கோகோ பயிரிடுதல், விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல் ஆகிய துறைகளில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தாமல் இருக்கும் வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சோஷியல் ரெஸ்பான்ஸிபிளிட்டி சேவையில் சமூக பொறுப்புணர்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT