Published : 01 Mar 2014 02:52 PM
Last Updated : 01 Mar 2014 02:52 PM

பாஜகவில் இணைந்தார் ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங்

ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலருடன் பாஜகவில் இணைந்த வி.கே.சிங், பாஜக ஒரு தேசியவாத கட்சி. அத்தகைய கட்சியே நிலையான, வலுவான ஆட்சியை மத்தியில் அமைக்க முடியும். அதன் காரணமாகவே பாஜகவில் இணைந்ததாக கூறினார்.

மேலும், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் எப்போதும் தேச நலனில் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள். பாஜகவால் மட்டுமே தேச நலன் சார்ந்த ஆட்சி செலுத்த முடியும், எனவே ராணுவத்தினர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

மத்திய அரசை விமர்சிக்கத் தவறாத வி.கே.சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ராணுவ வீரர்கள் நலன் காக்கத் தவறிவிட்டதாக கூறினார். அண்மையில், நடைபெற்ற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துகளை சுட்டிக் காட்டியும் அவர் விமர்சித்தார்.

பின்னர், வி.கே.சிங்கை கட்சிக்கு வரவேற்றுப் பேசிய ராஜ்நாத் சிங், பாஜகவில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என தான் நம்புவதாக கூறினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் படை வீரர்கள் நலன் காக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல், சீன ஆக்கரமிப்பு, ராணுவ வீரர்கள் தலை துண்டிப்பு ஆகிய விவகாரங்கள் சுட்டிக் காட்டி மத்திய அரசுக்கு ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று (வெள்ளிக் கிழமை) ராணுவ முன்னாள் தளபதி வி.கே.சிங், மத்தியப் பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தார். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தானது தான் என வி.கே.சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எதிர்பார்க்கப்பட்டது போலவே அவர் பாஜகவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x