Published : 02 Dec 2013 08:15 AM
Last Updated : 02 Dec 2013 08:15 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை தரும் அரசியல் சாசனச் சட்டம் 370-வது பிரிவு தொடர்பான தனது நிலைப்பாட்டை பாஜக மாற்றிக்கொண்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும். அந்த பிரிவின் மூலம் காஷ்மீர் மக்களுக்கு நன்மை கிடைக்கிறது என்றால், அதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கைவிடத் தயார் என்றும் பாஜக கூறியுள்ளது.
குஜராத் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, ஜம்முவில் நடைபெற்ற கட்சியின் பேரணியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
“370-வது பிரிவு குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இந்த பிரிவு, மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும்.
காஷ்மீரில் 370-வது பிரிவு அமலில் இருப்பதால், பெண்களுக்கு சம உரிமை கிடைக்கவில்லை. மற்ற மாநிலங்களில் உள்ள அளவுக்கு கூட ஆண் பெண் சமத்துவம் இங்கு இல்லை.
முதல்வர் ஒமர் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே பெண்ணை திருமணம் செய்தால், காஷ்மீர் குடிமகனுக்குரிய அனைத்து உரிமைகளும் ஒமருக்கு அப்படியே இருக்கும். அதுவே, அவரின் சகோதரி சாரா காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே ஒருவரை திருமணம் புரிந்து சென்றால் உரிமைகளை அவர் இழந்துவிடுவார்.
இது பெண்களுக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறை இல்லையா?
பஞ்சாயத்துகளுக்கு நிதி அதிகாரத்தை அளிக்கும் 73-வது சட்டத் திருத்தத்தை காஷ்மீர் அரசு அமல்படுத்தாமல் உள்ளது. தன்னாட்சி அதிகாரம் பற்றி பேசும் தேசிய மாநாட்டுக் கட்சி, தனது ஆட்சியின் கீழ் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தை வழங்க மறுக்கிறது.
மாநில அரசு ஊழலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், மற்ற மாநிலங்களில் அமலில் இருக்கும் ஊழல் தடுப்புச் சட்டம், காஷ்மீரில் மட்டும் செயல்பாட்டில் இல்லை.
60 ஆண்டுகளாக காஷ்மீர் பிரிவினை பற்றி (தன்னாட்சி அதிகாரம்) பேசி வருகிறார்கள். அதனால் மக்கள் கண்ட பலன் என்ன? அவர்கள் பிரிவினைவாதத்தைத்தான் ஊக்கு வித்துள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் இயற்கை எழில் மிக்கது. வழிபாட்டுத் தலங்களும் இங்கு அதிகம். ஆனால், இங்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணிகள் செல்கின்றனர்.
பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறுகின்றன. இங்கு திரைப்பட கல்வி நிறுவனத்தை இன்னும் அமைக்காமல் இருப்பது ஏன்? மாநில அரசு வளர்ச்சிப் பணிகளில் அக்கறையின்றி உள்ளது.
லடாக் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்த, லே பகுதியிலிருந்து கைலாஷ் மானசரோவருக்கு பாதையை ஏற்படுத்துவது குறித்து மாநில அரசு ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது?
இந்திய எல்லையை ஒட்டியுள்ள சீனப் பகுதியில் வசிக்கும் கிராமத்தினருக்கு அந்நாட்டு அரசு இலவச சிம் கார்டுகளை அளித்து வருகிறது. அதே போல, நமது எல்லையில் வசிப்போருக்கு தொலைத்தொடர்புத் துறையால் சிம் கார்டுகளை வழங்க முடியாதா?” என்று கேள்வி எழுப்பினார் மோடி.
ராஜ்நாத் சிங் கருத்து
முன்னதாக பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், “370-வது பிரிவு அமலில் இருப்பதால் காஷ்மீருக்கு நன்மை கிடைக்கிறது என்றால், நாங்கள் அதை ஏற்றுக் கொள்வோம்.
சமீபத்தில் சீனா சென்ற பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டுடன் எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். அதில் உள்ள ஷரத்துகள் பல சர்ச்சைக்குரியதாக உள்ளன. நான் அறிந்த வரை, தவறுதலாக எல்லையைத் தாண்டி வரும் படையை விரட்டியடிக்கும் வகையில் மற்ற நாட்டின் படை பின் தொடர்ந்து செல்லக்கூடாது என்றெல்லாம் அந்த ஒப்பந்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் முன்பு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் யோசிக்கவே இல்லை.
சீனாவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எழுப்புவோம். இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துவோம்” என்றார்.
அரசியல் சாசன சட்டம் 370-வது பிரிவை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கடுமையாக வலியுறுத்தி வரும் பாஜக, இப்போது அது குறித்து விவாதிக்கலாம் என்றும், மக்களுக்கு நன்மை அளிக்கிறது என்றால் தொடர்ந்து அமலில் இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறது. இது, அக்கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத் தகுந்த மாற்றமாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT