Published : 11 Dec 2013 09:21 PM Last Updated : 11 Dec 2013 09:21 PM
நேர்மையான அரசியல்வாதிகளுக்கு ஆம் ஆத்மி அழைப்பு
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் நேர்மையான அரசியல்வாதிகளை ஆம் ஆத்மியில் இணையலாம் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, ராகுல் காந்தியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவும் முடிவு செய்துள்ளது.
டெல்லியில் இன்று (புதன்கிழமை) ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக் கொண்டாட்டக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலிலும் தமது கட்சி போட்டியிடும் என்று தெரிவித்தார். எனினும், எந்தெந்த மாநிலங்களில் போட்டியிடும் என்று அவர் குறிப்பிடவில்லை.
ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு, ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்து செயல்படுவதற்கு, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியில் இருந்தும் நேர்மையாளர்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கூடுதலாக நிதி தேவைப்படுவதாகவும், மக்கள் தங்களால் இயன்ற நிதியை தாரளமாக வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் மூத்த தலைவரான மனிஷ் சிசோதியா, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து குமார் விஸ்வாஸ் போட்டியிட முடியும் என்று குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக தமது வேட்பாளரை நிறுத்தி, அவரைத் தோற்கடிக்க ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருவதாகத் தெரிகிறது.
WRITE A COMMENT