Published : 16 Apr 2017 11:48 AM
Last Updated : 16 Apr 2017 11:48 AM
ஆந்திர மாநிலம், சித்தூரின் புதிய மேயராக ஹேமலதா நேற்று பதவியேற்றார். இவர், கொலை செய்யப்பட்ட முன்னாள் மேயர் அனுராதாவின் மருமகள் ஆவார்.
சித்தூர் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்ட பிறகு, முதல் மேயராக கட்டாரி அனுராதா பதவி வகித்து வந்தார். இவரது கணவர் கட்டாரி மோகன், தெலுங்கு தேசம் கட்சியின் சித்தூர் மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 16.11.2015-ல் சித்தூர் மாநகராட்சி அலுவலகம் வந்த மேயர், அவரது கணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தை அப்போது உலுக்கியது.
கொலை தொடர்பாக கட்டாரி மோகனின் மைத்துனர் சிண்டு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் அனுராதாவின் கங்கனபல்லி வார்டுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவரது மருமகள் ஹேமலதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே மேயராக பொறுப்பேற்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். அதன்படி சித்தூர் புதிய மேயராக ஹேமலதா நேற்று பொறுப்பேற்றார். மாநகராட்சி அலுவலகத்தில் எளிமையாக நடந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஜெயின் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில், அமைச்சர் அமர்நாத் ரெட்டி, எம்.எல்.சி. ஸ்ரீநிவாசுலு, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT