Published : 20 Feb 2014 12:00 AM
Last Updated : 20 Feb 2014 12:00 AM

தெலங்கானா மசோதாவை எதிர்த்து மாநிலங்களவையில் எம்.பி. ரகளை- மசோதாவை இன்று தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு

தெலங்கானா மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநிலங்களவைச் செயலாளர் ஷம்ஷெர் கே.ஷெரீப் வைத்திருந்த காகிதத்தை தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. சி.எம்.ரமேஷ் பறிக்க முயற்சித்து ரகளையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற அமளியால் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையில் தெலங்கானா மசோதா வியாழக்கிழமை (பிப்ரவரி 20) தாக்கல் செய்யப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தொடங்கியதும் தெலங்கானா மசோதாவுக்கு எதிராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் சிலர் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் தெலங்கானா மசோதா செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டபோது நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பாக கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்க மறுத்த அவைத் தலைவர் ஹமீது அன்சாரி,

“இன்னொரு அவை குறித்து இங்கு விவாதிக்கக் கூடாது. விதிமுறையை கடைப்பிடியுங்கள்” என்றார். இதையடுத்து மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கூட்டம் தொடங்கியபோது, தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் சி.எம்.ரமேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி ஆகியோர் அவையின் மையப் பகுதியில் நின்றுகொண்டு கோஷமிட்டனர்.

தெலங்கானா தனி மாநில மசோதா நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மக்களவையில் இருந்து வந்த தகவலை வாசிக்குமாறு மாநிலங்களவைச் செயலாளர் ஷம்ஷெர் கே.ஷெரீப்பிடம் அவைத் துணைத் தலைவர் பி.ஜெ.குரியன் கூறினார்.

அதன்படி மாநிலங்களவைச் செயலாளர் வாசிக்கத் தொடங்கியபோது, அவர் கையிலிருந்த காகிதத்தை சி.எம். ரமேஷ் பறிக்க முயன்றார். அதை செயலாளர் ஷெரீப் தடுத்தார். செயலர் முன்பு இருந்த மைக்கை ரமேஷ் உடைக்க முயற்சித்தார். அவைக் காவலர்கள் விரைவாக வந்து ரமேஷை தடுத்து நிறுத்தினர்.

ரமேஷின் செயலால் கடும் அதிருப்தியடைந்த பி.ஜெ.குரியன் கூறுகையில், “இது மிகவும் துரதிருஷ்டவசமானது. அவைச் செயலாளர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. விலகிச்செல்லுங்கள்” என்றார்.

தொடர்ந்து அமளி ஏற்பட்டதால், அவை நடவடிக்கைகள் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

பின்னர் அவை கூடியதும், “ரமேஷின் செயல்பாடு மிகவும் வருந்தத்தக்கது. இது உரிமை மீறலுக்கு ஒப்பான செயலாகும்” என்று குரியன் தெரிவித்தார். அப்போது ரமேஷ் கூறுகையில், “வேண்டுமென்றே அவ்வாறு செயல்படவில்லை. உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு நடந்து கொண்டேன். எனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.

அப்போது தெலங்கானா எதிர்ப்பாளரான மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் எழுந்து பேச முயன்றார். “மசோதாவை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவில்லை. எனவே அது தொடர்பாக பேச வேண்டாம்” என்று குரியன் தெரிவித்தார். எனினும், அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தும் வகையில் கே.எஸ்.ராவ் நடந்து கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த குரியன், “மக்களவையை சேர்ந்த கே.எஸ்.ராவ், அமைச்சர் என்ற முறையில் மாநிலங்களவையில் விதிமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மாநிலங்களவையை விட்டு வெளியேறலாம்” என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவை நடவடிக்கையை நாள் முழுவதும் குரியன் ஒத்திவைத்தார்.

முன்னதாக தெலங்கானா மசோதா தொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தொடர்ச்சியாக நிகழ்ந்த அமளியால், அந்த மசோதாவை வியாழக்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் தெலங்கானா மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x