Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM
டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை திங்கள்கிழமை அவசரமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஜன் லோக்பால் மசோதா மற்றும் சீக்கியருக்கு எதிரான கலவரம் மீதான விசாரணை குறித்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
வரும் 15-16 தேதிகளில் இந்திரா காந்தி ஸ்டேடியத்தில் டெல்லி சட்டசபையை கூட்டி பொதுமக்கள் முன்பாக ஜன் லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என கேஜ்ரிவால் கூறியிருந்தார்.
இந்நிலையில் மசோதாவுக்கு மத்திய உள்துறையின் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு கூறியது.
மேலும் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கப்போவதில்லை என டெல்லி காங்கிரஸ் அறிவித்தது.
இதுகுறித்து, சொலிசிட்டர் ஜெனரலிடம் துணைநிலை ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்டதாக தகவல் வெளியானது சர்ச்சையானது. இந்த மசோதா நிறைவேறாவிட்டால் டெல்லி அரசு கவிழும் என கேஜ்ரிவால் மிரட்டல் விடுத் திருந்தார்.
இந்நிலையில், துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை கேஜ்ரிவால் திங்கள்கிழமை அவசரமாக சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் கேஜ்ரிவால்.
"ஊழலை எதிர்த்துப் போராட ஒருமுறை அல்ல, நூறு முறை கூட நான் முதலமைச்சர் பதவியை துறக்கத் தயாராக இருக்கிறேன்" என டுவிட்டரில் கூறியுள்ளார் கேஜ்ரிவால்.
இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியி னர் 'தி இந்து'விடம் கூறுகையில், "லோக்பால் மசோதா மற்றும் 1984-ல் பிரதமர் இந்திரா காந்தி சுடப்பட்ட பின்னர் நிகழ்ந்த சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்த விசாரணை ஆகியவை பற்றி சில விளக்கங்களை தருவதற்காக இந்த சந்திப்பு நடந்தது" என்றனர்.
மேலும், "சட்டம் ஒழுங்கு பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் ஜன்லோக்பால் மசோதாவை பொதுமக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்துவது குறித்து மறு பரிசீலனை செய்யுமாறு துணை நிலை ஆளுநர் கூறி உள்ளார். ஆனால், சீக்கியருக்கு எதிரான கலவரம் குறித்த விசாரணைக்கு நஜீப் ஜங் ஒத்துக் கொண்டிருக்கிறார்" எனவும் தெரிவித்தனர்.
சட்ட அமைச்சகத்திடம் கருத்து
இதற்கிடையே, ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன எனக் கேட்டு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு நஜீப் ஜங் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதில் சர்ச்சை எழாமல் இருக்க, தெளிவான ஆலோசனை தரும்படி சட்ட அமைச்சகத்திடம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சுயேச்சை எம்.எல்.ஏ. மிரட்டல்
கேஜ்ரிவால் அரசிற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கப் போவதாக சுயேச்சை எம்.எல்.ஏ. ராம்வீர் ஷோக்கின் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், "தேர்தல் வாக்குறுதிகளை கேஜ்ரிவால் நிறைவேற்றத் தவறிவிட்டார். எனவே, அவரது அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது தொடர்பாக துணைநிலை ஆளுநரை சந்திக்க இருக்கிறேன். ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே எம்.எல்.ஏ.வான ஷோஹிப் இக்பாலும் என்னுடன் ஆளுநரை சந்திப்பார்" என்றார்.
அரசுக்கு ஆபத்து இல்லை
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டபையில் கேஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். ஒருமுறை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற பின் அடுத்த 6 மாதங்களுக்கு பிறகுதான் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது. எனவே, கேஜ்ரிவால் அரசுக்கு உடனடியாக ஆபத்தில்லை எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT