Published : 27 Jan 2014 12:00 AM
Last Updated : 27 Jan 2014 12:00 AM
புதுச்சேரியில் பாஜகவுடன் என்.ஆர். காங்கிரஸ் புதுக் கூட்டணியைக் கட்டியிருக்கிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன் நள்ளிரவில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற் கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
என்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து முதலில் பாமக.தான் ரங்கசாமியிடம் பேசியது. ஆனால், வேட்பாளரை நாங்கள்தான் நிறுத்துவோம் என ரங்கசாமி திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால் மெல்ல நழுவிக் கொண்டது பாமக. இந்நிலையில், புதுச்சேரி அரசின் முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கி ஒத்துழைப்புக் கொடுக்காமல் முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சாட்டினார் ரங்கசாமி.
காங்கிரஸ்காரர்களை கோபமடையச் செய்யவேண்டும் என்பற்காகவே, கடந்த மாதம் பாஜக நடத்திய மாரத்தான் போட்டி பரிசளிப்பு விழாவில் நடுநாயகமாய் போய் கலந்துகொண்டார் ரங்கசாமி. இதனிடையே, துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுடனும் மோதியவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டப்போவதாக அறிவித்தார். இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டே வந்த பாஜக, சமயம் பார்த்து ரங்கசாமியைச் சந்திக்க தூதுக்குழுவை அனுப்பி வைத்தது.
நள்ளிரவில் பேச்சுவார்த்தை
கடந்த 23-ம் தேதி இரவு பாஜக மேலிட பொறுப்பாளர் கே.என்.லட்சுமணன், தமிழக அமைப்புச் செயலர் மோகன்ராஜுலு ஆகியோர் புதுவைக்கு வந்தனர். தனியார் ஒட்டலில் அவர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் ரங்கசாமி, தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். இதை உறுதி செய்வதற் காக ரங்கசாமியை நாம் தொடர்பு கொண்டபோது, “ டீ சாப்பிட்டுப் போகலாம்னு வந்தேன். பாஜக-வுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைப்பது தொடர்பாக விரைவில் சுமுகமான முடிவு எட்டப்படும்’’ என்றார். அன்று நள்ளிரவு திலாசு பேட்டையில் உள்ள ரங்கசாமி வீட்டுக்குச் சென்ற பாஜக குழுவினர் அங்கு சுமார் ஒரு மணி நேரம் ரங்கசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் முடிவில்தான் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய என்.ஆர். காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஒருவர், “ரங்கசாமி வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, ’மத்தியில் ஆட்சிக்கு வந்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிப்பதாக புதுவை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி அறிவிக்க வேண்டும். புதுவையில் கூட்டணிக்கு தலைமை நாங்கள் என்பதால் நாங்கள்தான் வேட் பாளரை நிறுத்துவோம். கூட்டணியில் பாமக சேர்ந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என்பது உள்ளிட்ட விஷயங்களை தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டார் ரங்கசாமி. கிட்டத்தட்ட பாஜக - என் .ஆர். காங்கிரஸ் கூட்டணி உறுதியான மாதிரிதான்’’ என்றார்.
பாஜக தரப்பிலிருந்து ‘தி இந்து’விடம் பேசியவர்கள், “புதுவை தொகுதியை எங்களுக்குக் கேட்டோம். ஆனால், அவர்கள் வேட்பாளரை நிறுத்துவதில் உறுதியாக உள்ளனர். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்கும் உறுதிமொழியை மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவிப்பார். எங்களது கூட்டணி குறித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் முறையான அறிவிப்பு வெளியாகும்’’ என்று சொன்னார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT