Last Updated : 25 Feb, 2014 10:07 AM

 

Published : 25 Feb 2014 10:07 AM
Last Updated : 25 Feb 2014 10:07 AM

விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலையை நிர்ணயிக்கலாம்- கர்நாடகத்தில் முதன்முறையாக புரட்சிகர திட்டம்

விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவசாய விளைபொருட்களை ஆன்லைனில் நேரடியாக சந்தைப்படுத்தும் புதிய திட்டம் கர்நாடகாவில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது தொடர்பாக திங்கள்கிழமை பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்கில் அம்மாநில முதல்வர் சித்தராமய்யா கூறியதாவது:

விவசாயிகள் இரவுபகலாக கடினமாக உழைத்து, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள் கின்றனர்.

தனியார் நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட் களுக்கு தாங்களே விலையை நிர்ணயிக்கின்றன. சில நிறுவ னங்கள் உற்பத்திச் செலவைவிட பன்மடங்கு விலை யை கூட்டி விற்பனை செய்கின்றன. இதனால் பணக்காரர்கள் மேலும் பணக்கா ரர்களாக ஆகிக் கொண்டிருக் கிறார்கள்.

விவசாய நாடான இந்தியாவில் விவசாயிகளுக்கு இன்னும் முழுமையான விடுதலையே கிடைக்கவில்லை.

விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் விளைவித்த பொருட் களுக்கு அவர்களே விலையை நிர்ணயிக்க வேண்டும்.

அதற்கான உரிமையை அரசும் தனியாரும் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இதுதான் இந்திய விவசாயிகளின் நீண்டநாள் ஆசை. என்னுடைய விருப்பமும் அதுதான்.

இதற்காக விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வருன்றனர். எனவே அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் அதை எதிர்க்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

இதற்காக கர்நாடகாவில் விளைபொருட்கள் விலை நிர்ணய ஆணையம் இன்னும் ஓரிரு நாட்களில் அமைக்கப்படும். விளைபொருட்களுக்கு சரியான, நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது இருக்கும் சந்தை முறையில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இதுதொடர்பாக புதிய விளை பொருள் சந்தைக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கர்நாடகா முழுவதும் ஒன்றிணைந்த சந்தைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் வர்த்தக உரிமம் வைத்திருக்கும் எந்த மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரியும் விவசாயிகளின் விளைபொருள்களை ஏலம் மூலம் கொள்முதல் செய்ய முடியும்.இதன்மூலம் விளைபொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

இதனால் இடைத்தரகர்களின் தலையீடு ஒழியும். இந்த புதிய திட்டத்தின் மூலம் விளைபொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்காவிட்டால், ஏலத்தை ஏற்க விவசாயிகள் மறுக்கவும் புதிய விளைபொருள் சந்தை கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல விளைபொருட்களை கிடங்குகளில் சேமித்து வைக்கும் வசதியைப் பெற, வங்கிகள் மூலம் கடனுதவி பெறலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x