Published : 21 Dec 2013 10:49 AM
Last Updated : 21 Dec 2013 10:49 AM
பிரத்யேக செயல்பாடுகளுக்கான சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ரக விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
துணைத்தூதர் கைது விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பிணக்கு இருந்து வரும் நிலையிலும் ரூ.4,000 கோடி மதிப்பில் 6 விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.
இந்திய விமானப்படை வசம் ஏற்கெனவே சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ரக விமானங்கள் 6 உள்ளன. இவ்வகை விமானங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது ராணுவ போக்குவரத்துப் பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன.
வசதி குறைந்த ஓடுதளத்திலும் இவ்வகை விமானங்களை எளிதில் தரையிறக்க முடியும். வானில் பறந்தபடி கமாண்டோக்களை குதிக்க வைக்கும் வசதியும், இருளிலும் தெளிவாகப் பார்க்கும் வசதியும் இந்த விமானத்தின் சிறப்பம்சமாகும்.
போர்க்காலத்தில் தளவாடங் களையும் இதர பொருள்களையும் அளிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஏற்கெனவே ரூ. 5,500 கோடி மதிப்பில் 6 விமானங்கள் விமானப்படை பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டுள்ளன.
இவை ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் நிறுத்தப்பட் டுள்ளன. புதிதாக வாங்கப்பட உள்ள 6 விமானங்கள் மேற்கு வங்கத்தில் சீன எல்லையோரம் உள்ள பனாகர் தளத்தில் நிறுத்தப்படவுள்ளன.
இந்தியாவுக்கும் அமெரிக் காவுக்கும் இடையேயான வெளி நாட்டு ராணுவ விற்பனை வழி மூலம் இந்தக் கொள்முதல் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT