Published : 16 Jun 2017 01:23 PM
Last Updated : 16 Jun 2017 01:23 PM
1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவ வழக்கில் முக்கிய குற்றவாளி முஸ்தபா தோசா, போர்ச்சுகலில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட தாதா அபு சலீம் உட்பட 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தண்டனை நிர்ணயிப்பது தொடர்பான விவாதம் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 12-ம் தேதி அடுத்தடுத்து 12 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் அப்பாவி மக்கள் 257 பேர் உயிரிழந்தனர். மேலும் 713 பேர் காயமடைந்தனர். ரூ.27 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.
இந்த வழக்கில் ஏற்கெனவே யாகூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட 100 பேருக்கு கடந்த 2007-ல் தண்டனை விதிக்கப்பட்டது. 23 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
இந்த வழக்கில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அவரது வலது கரமான சோட்டா ஷகீல், டைகர் மேமன் உள்ளிட்ட பலர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட தாதாக்கள் முஸ்தபா தோசா, அபு சலீம் மற்றும் கரீமுல்லா கான், பிரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்ச்சன்ட், அப்துல் கயூம் ஆகிய 7 பேர், முதன்மை வழக்கு விசாரணையின் இறுதியில் கைது செய்யப்பட்டனர். எனவே இவர்கள் மீதான வழக்கு மும்பை தடா நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வந்தது.
இந்த 7 பேரும் குற்றச்சதி, இந்திய அரசுக்கு எதிராக போரிட்டது, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் அப்துல் கயூம் மட்டும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். மற்ற 6 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.
அபு சலீம் உள்ளிட்டோர் ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு உதவிய ரியாஸ் சித்திக், தடா சட்டத்தில் மட்டும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
மற்ற 5 பேரும் இந்திய தண்டனை சட்டம், தடா சட்டம், வெடிபொருட்கள் சட்டம், ஆயுதங்கள் தடை சட்டம், பொதுச் சொத்துகள் அழிப்பு தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். என்றாலும் நாட்டுக்கு எதிராக போரிட்ட குற்றச்சாட்டில் இருந்து 7 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியான முஸ்தபா தோசா ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட வெடிபொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவந்ததுடன் வெடிகுண்டு தாக்குதல் மற்றும் ஆயுதப் பயிற்சிக்காக இங்குள்ள இளைஞர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏகே 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகளை இவர் கொடுத்துள்ளார். அபு சலீம், குஜராத்தில் இருந்து மும்பைக்கு ஆயுதங்களை கடத்தி வந்துள்ளார்.
இந்த வழக்கில் 750 அரசுத் தரப்பு சாட்சிகள் மற்றும் 50 சாட்சிகளின் வாக்குமூலத்தை நீதிமன்றம் பதிவு செய்தது. வழக்கில் சில ஆண்டுகளுக்குப் பின் அபு சலீம் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான முதன்மை வழக்கில், 100 பேர் தண்டிக்கப்பட்டனர். இவர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யாகூப் மேமனுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. வெடிகுண்டு வைத்தவர்களுக்கு ஆயுள் தண்டனையாக குறைத்தது. உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின் கடந்த 2015, ஜூலை 30-ல் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.
நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றம் கடந்த 2013 மே மாதம் 5 ஆண்டுகளாக குறைத்தது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் தாதா தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன், முகம்மது தோசா, முஸ்தபா தோசா ஆகியோர் தலைமையின் கீழ் செயல்படும் கிரிமினல்கள் இந்தியாவில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டியதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
“இந்திய அரசை அச்சுறுத்தி பணிய வைக்கவும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை கையாளுவதற்கு முஸ்தபா தோசா, டைகர் மேமன், சோட்டா ஷகீல் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் பயிற்சி முகாம் அமைத்துக் கொடுத்தனர். இதற்காக சிலரை இவர்கள் இந்தியாவில் இருந்து துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர். குண்டுவெடிப்புக்கு முன்னதாக குற்றவாளிகள் 15 முறை சதியாலோசனை நடத்தினர்” என்ற அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு, இது தொடர்பான இரண்டாவது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT