Published : 04 Dec 2013 12:00 AM
Last Updated : 04 Dec 2013 12:00 AM

பெங்களூர் மருத்துவமனையில் மதானிக்கு தீவிர சிகிச்சை

பெங்களூர் தொடர் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நசீர் மதானிக்கு செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நல குறைவு ஏற்பட்ட‌தால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் 7 இடங்களில் தொடர்ச்சியாக வெடிகுண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் அப்துல் நசீர் மதானிக்கு தொடர்பு இருப்பதாக கூறி, கர்நாடக போலீசார் அவரை கேரளாவில் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூர் அழைத்து வரப்பட்டு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் மறுப்பு

'தனக்கும் வெடிகுண்டு வழக்கிற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. அதனால் தன்னை விடுவிக்க வேண்டும்' என கர்நாடக‌ உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மதானி வழக்கு தொடர்ந்தார்.

பெங்களூர் வெடிகுண்டு வழக்கில் அவரது தொடர்பினை பெங்களூர் போலீசார் நிரூபிக்க தவறியபோதும், மதானியை விடுவிக்க நீதிமன்றம் முன்வரவில்லை. இதனால் கடந்த 4 ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார்.

முதுமையின் காரணமாகவும், சிறை வாசம் காரணமாகவும் மதானியில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அவர் பலமுறை நீதிமன்றத்தில் முறையிட்ட போதும் ஜாமீன் வழங்கப்படவில்லை.

நோய்களின் தாக்கம்

பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் மதானிக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த மதானியை ஆஸ்துமா, மூச்சு திணறல், பார்வைக் குறைபாடு போன்ற‌ நோய்களும் பாதித்தன.

பார்வை குறைபாடுக்காக தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற தன்னை அனுமதிக்க வேண்டும் என மதானி கோரிக்கை வைத்தார். இக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அவரை பெங்களூர் அகர்வால் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தது.

மருத்துவமனையில் அனுமதி!

கண் அறுவை சிகிச்சை முடிந்து சிறையில் அனுமதிக்கப்பட்டிருந்த மதானிக்கு க‌டந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிமன்றம் மதானியின் கோரிக்கையை திங்கள்கிழமை ஏற்றுக்கொண்டதால், அவர் பெங்களூரில் உள்ள‌ மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றினர்.

மதானியை அருகில் இருந்து கவனித்துக்கொள்ள அவரது மனைவி சூஃபி-க்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x