Published : 18 Mar 2016 02:05 PM
Last Updated : 18 Mar 2016 02:05 PM

குற்றச்சாட்டுகளே இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டேன்: ஜே.என்.யூ. மாணவி குமுறல்

பிப்ரவரி 9-ம் தேதி ஜே.என்.யூ. வளாகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பாக 8 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதில் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமலேயே ஐஸ்வர்யா அதிகாரி என்ற மாணவியும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்த மாணவி குமுறியுள்ளார்.

அன்றைய தின நிகழ்வுகளை விசாரிக்க உயர்மட்ட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவின் 8 பக்க அறிக்கையில் ஐஸ்வர்யா அதிகாரியின் பெயர் இடம்பெறவில்லை.

ஆனால் குற்றச்சாட்டுகள் இன்றி தன்னை இடைநீக்கம் செய்ததாக பன்னாட்டு உறவுகள் துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் மாணவி ஐஸ்வர்யா அதிகாரி தான் ‘உடைந்து’ போனதாகவும், கோபமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

“என் மீது எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லாமலேயே நீண்ட நாட்களுக்கு நான் தடை செய்யப்பட்டேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான பாதிப்பை ஏற்படுத்தும் காலக்கட்டமாகும். நான் எனது இறுதி செமஸ்டரில் இருக்கிறேன், நான் வகுப்புகளை கவனித்தேயாக வேண்டும். ஆனால் இப்போது இடைநீக்கத்தினால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

எனக்கு இதில் கோபம் வரவழைப்பது என்னவெனில் விசாரணை கமிட்டியின் அறிக்கையில் என் பெயர் கூட இடம்பெறவில்லை. பின்பு ஏன் நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன் என்று நிர்வாகத்திடம் கேட்கத்தான் போகிறேன்” என்றார்.

பாலியல் தொந்தரவுக்கு எதிரான பல்கலைக் கழக கமிட்டியில் ஐஸ்வர்யா அதிகாரி உறுப்பினர், தன்பாலின சேர்க்கை விவகாரம் உட்பட, பாலியல் தொந்தரவுக்கு ஆளோவோர் வெளியில் வந்து அதனை புகார் செய்யும் சூழலை உருவாக்குவது வரை சில முக்கிய விவகாரங்களில் ஐஸ்வர்யா செயல்பட்டுள்ளார்.

இதனால் வளாகத்தில் ‘மாணவர்களின் குரல்களுக்கு எதிராக’ நிர்வாகம் செயல்படுவதன் எதிரொலியே கண்ணய்யா குமார், ஆனந்த் நாராயண், நாகா மற்றும் அஷுடோஷ் குமார் ஆகியோர் பெயருடன் தன் பெயரும் இடைநீக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்கிறார் ஐஸ்வர்யா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x