Published : 11 Oct 2014 03:09 PM
Last Updated : 11 Oct 2014 03:09 PM

ஹுத்ஹுத் புயல் அச்சுறுத்தல்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் 1.11 லட்சம் பேர் வெளியேற்றம்

கிழக்கு கடற்கரை பகுதியை நெருங்கிவரும் ஹுத்ஹுத் புயல், ஆந்திராவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அம்மாநில கடற்கரையோர கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் அபாயத்தை சந்திக்கும் விதமாக, அங்கு 146 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 1.11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 5 லட்சம் பேரை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஆந்திர மாநில அரசு ஈடுபட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி அந்தமானில் புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. கடலோர ஆந்திராவை நோக்கி இந்தப் புயல் சின்னம் நகர்ந்து வரும் நிலையில், நாளை (சனிக்கிழமை) விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசாவின் புவனேஷ்வருக்கு இந்தப் புயல் சின்னம் கரையை கடக்கிறது.

ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நாளை கரையை கடக்க இருக்கும் ஹுத்ஹுத் புயல், கிழக்கு கடற்கரை அருகே 100 கி.மீ. தொலைவில் உள்ள இந்த புயல் வெள்ளிக்கிழமை மாலை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | படம்: பி.டி.ஐ.

இந்தப் புயலின் அபாயம் காரணமாக ஆந்திரா, ஒடிசா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

கடந்த சில வருடங்களில் இது போன்ற புயல் சேதங்களால் கடுமையான அளவில் ஆந்திர மாநிலம் பாதிக்கப்பட்ட நிலையில், நாளை வர இருக்கும் அசாதாரண சூழலை சந்திப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மெற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் பேரிடர் மீட்பு குழுவினரை ஆந்திராவின் கடலோர கிராமங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினத்திலிருந்து 24,000-க்கும் மேலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், விஜயநகரத்திலிருந்து 15,000 பேரும், ஸ்ரீகாகுளத்திலிருந்து 46,000 பேரும் மற்றும் கிழக்கு கோதாவரி போன்ற தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஆங்காங்கே மொத்தம் 146 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் பேரிடர் மீட்பு குழுவின் 17 அணியினரும் சூழலை கையாளும் நடவடிக்கைகளுக்காக ஆந்திர கடற்கரை கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதை தவிர விசாகப்பட்டின துறைமுக பகுதிக்கு ராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீகாகுலத்தில் சனிக்கிழமை காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புயல் நெருங்கி கொண்டிருப்பதால், காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் கடற்கரையோர பகுதிகளில் உள்ள கூரை வீடுகள் புயலில் தூக்கி வீசப்படலாம், சாலையில் உள்ள மரங்கள் மற்றும் கம்பங்கள் சாயலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து, ஆந்திர அரசு அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்துள்ளதாக அம்மாநிலத் துணை முதல்வர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இந்திய கடற்படையின் சார்பில் 4 கப்பல்கள் விசாகப்பட்டின துறைமுகத்தில், ரப்பர் படகுகள், உடை, உணவு, போர்வை, மருத்துவ உதவிப் பொருட்களுடன் போன்றவையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடற்படையின் சுமார் 5,000 வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக விமானப்படை சார்பில் 6 விமானங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், கூடுதலாக 30 ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் மீட்பு பணிக்காக வைக்கப்பட்டுள்ளனர்.

ஹுத்ஹுத் புயல் நெருங்கி வரும் நிலையில், புயல் தொடர்பான புகைப்படங்களை அளிக்குமாறு இஸ்ரோ ஆய்வு மையத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரியுள்ளார். ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விசியநகரம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் 64 மண்டலங்களில் உள்ள 436 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 370 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் 13 பிரிவுகள் தயார் நிலையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x