Published : 04 Jul 2016 03:47 PM
Last Updated : 04 Jul 2016 03:47 PM
எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதாக சான்றிதழ் வழங்கப்பட்ட இந்திய போலீஸ் தம்பதி மீது நேபாள சுற்றுலாத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை தாங்கள் தொட்டு விட்டதாக இந்திய போலீஸ் தம்பதியரான தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி ராத்தோட் ஆகியோர் உரிமை கோர, அதன் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் நேபாளம் இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள்களன தினேஷ் மற்றும் தாரகேஸ்வரி தம்பதியினர் கடந்த மே 23-ம் தேதி தாங்கள் 8,848 மீட்டர் அல்லது 29,029 அடி உயர எவரெஸ்ட் சிகரத்தை தாங்கள் எட்டியதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஆனால் இவர்களுடன் சென்ற மற்ற மலையேறு வீரர்கள் இவர்களின் உரிமை கோரல் மீது கடும் ஐயங்களை எழுப்பியுள்ளனர். அதாவது எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு விட்டதாக இவர்கள் புகைப்படங்களில் தில்லுமுல்லு செய்துள்ளனர் என்று கூறினர்.
இதனையடுத்து நேபாள் சுற்றுல்லாத் துறை தலைவர் சுதர்ஷன் பிரசாத் தாகல் கூறும்போது, “எவரெஸ்ட் சிகரத்தை எட்டியதாக கூறும் இந்திய போலீஸ் தம்பதியினரின் உரிமை கோரல் மீது விசாரணை தொடங்கியுள்ளோம். முன்னதாக சுற்றுலாத்துறை எவரெஸ்ட் மலையேறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் பேசி சான்றிதழ் வழங்கினோம்.
சான்றிதழ் வழங்க நாங்கள் புகைப்படங்களையே ஆதாரமாக எடுத்துக் கொள்வோம். இதில் போலியாக புகைப்படங்களைத் தயாரித்தால் அதனைக் கண்டுபிடிப்பது மிக மிக கடினம். தற்போது விசாரணையில் இவர்கள் புகைப்படங்கள் போலி என்று முடிவானால் சான்றிதழை திரும்பப்பெறுவதோடு மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும் சிக்குவார்கள், ஞாயிறு மாலை விசாரணை தொடங்கியது” என்றார் அவர்.
எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு விட்டதாக கூறிக்கொள்வது குற்றமாகாது எனினும், மற்ற 8 மலையேறு வீரர்கள் இந்த போலீஸ் தம்பதியினருக்கு எதிராக இந்தியாவில் புகார் அளித்துள்ளனர்
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய பலர் அதன் மூலம் தங்களது கரியரை வளப்படுத்திக் கொண்டுள்ளனர். ஒன்று அனுபவங்களை நூலாக எழுதுவார்கள் இல்லையெனில் சுயமுன்னேற்ற நம்பிக்கை பேச்சாளர்களாவது வழக்கம்.
256 அயல்நாட்டினர் உட்பட மொத்தம் 456 பேர் சமீபமாக எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளனர். ஆனால் கடும் பனிச்சரிவு, பூகம்பம் ஆகியவை காரணமாக 2014-ல் ஒரே ஒரு நபர்தான் எவரெஸ்ட் சிகரத்தை எட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT