Last Updated : 20 Mar, 2015 07:42 PM

 

Published : 20 Mar 2015 07:42 PM
Last Updated : 20 Mar 2015 07:42 PM

உ.பி. ரயில் விபத்துக்கு பிரேக் வேலை செய்யாதது காரணம்?

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில், டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ள நிலையில், வண்டியில் பிரேக்கில் ஏற்பட்ட பழுதுதான் விபத்துக்குக் காரணம் என்று சில வட்டாரங்களும், நேரில் பார்த்தவர்களும் கருதுகின்றனர்.

உத்தரப் பிரதேச மாநில ரே பரேலி மாவட்டத்தில் பச்ராவன் கிராமத்துக்கு அருகே இன்று காலை 9.30 மணியளவில் டேராடூன் - வாரணாசி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அனில் சக்சேனா கூறும்போது, "முதற்கட்ட விசாரணையில் ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து நடந்திருப்பதாகத் தெரிகிறது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

பிரேக் பழுதே காரணம் என்று கூறப்படும் நிலையில் ரயில்வே நிர்வாகம், சிக்னலை கவனிக்காமல் ஓட்டுநர் மீறி ரயிலை ஓட்டிச் சென்றதுதே விபத்துக்குக் காரணம் என்று கூறியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறைக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில், “விசாரணைக்குப் பிறகே விபத்தின் உண்மையான காரணம் தெரியவரும். ஆனால் சிக்னலுக்காக நிறுத்த ரயில் பிரேக்கை ஓட்டுநர் பிடிக்க அது வேலை செய்யவில்லை என்றே தெரிகிறது” என்று கூறியுள்ளது.

எஞ்சினுக்கும் ரயில் பெட்டிகளுக்கும் இடையே உள்ள பிரேக்-பைப் துண்டிக்கப்பட்டிருக்கலாம். இதனால் பிரேக் பிடித்தும் வண்டி நிற்காமல் சென்றிருக்கலாம் என்று இந்த வட்டாரங்கள் ஐயம் எழுப்பியுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை பச்ரவான் ரயில் நிலையத்தில் 9.10 மணிக்கு இந்த ரயில் நிற்க வேண்டும். ஆனால் நிலையத்தில் நிற்கவில்லை. அதன் பிறகு தடம் புரண்டுள்ளது.

இந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பெட்டியில் பயணம் செய்த ஒருவர் பச்ரவான் ரயில் நிலையத்தில் வண்டி நிற்காமல் சென்றதால் ரயில் பெட்டியிலிருந்து குதித்து உயர் தப்பியுள்ளார், இவர் கூறும்போது, ஓட்டுநரும், ரயில் கார்டும் பதற்றத்தில் கதவருகே நின்று ஏதேதோ செய்கைகள் செய்தனர் என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, "பிரேக்குகள் பழுதடைந்தது போல்தான் தெரிந்தது. அதனால்தான் ஓட்டுநர் மற்றும் கார்டு ஆகிய இருவரும் வாக்கி-டாக்கியில் நிலைய அதிகாரியுடன் பதற்றமாகப் பேசிக் கொண்டிருந்தனர்" என்றார்.

இருந்தாலும் விசாரணைக்குப் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x