

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு எதிராக அந்த மாநில முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி.குமார், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.
இஸ்ரோ உளவு வழக்கு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி மோடியும் பாஜக தலைவர்களும் அவதூறாகப் பேசுவதாக அவர் தனது மனுவில் குற்றம்சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
இஸ்ரோ உளவு வழக்கில் நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இருப்பினும் பாஜக தலைவர்கள் இஸ்ரோ உளவு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்தி எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
இதுதொடர்பாக குஜராத் முதல் வர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி, விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளேன்.
நான் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஏஜென்ட் என்று கூறி நம்பி நாராயணனும் மீனாட்சியும் பழிசுமத்துகின்றனர். இதுபோல் மோடியும் ராஜ்நாத் சிங்கும் என்னைப்பற்றி பல்வேறு அவதூறு தகவல்களை பரப்புகின்றனர். நான் குஜராத்தில் பணியாற்றியபோது அந்த மாநில முன்னாள் முதல்வர் சங்கர் சிங் வகேலாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்குமாறு முதல்வர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அந்தத் தவறை நான் செய்யவில்லை என்றார் ஆர்.பி.குமார்.
இஸ்ரோ உளவு வழக்கு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்பான ஆவணங்களை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச் சேர்ந்த நம்பிநாராயணன் உள்ளிட்ட 2 விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு அளித்ததாக 1994-ல் புகார் எழுந்தது. இதில் மாலத்தீவைச் சேர்ந்த 2 பெண்களுக்கும் தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நம்பி நாராயணன் கடந்த 1998-ல் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் அண்மை யில் பேட்டியளித்த அவர், இஸ்ரோ உளவு விவகாரத்தில் அப்போதைய மத்திய உளவுத் துறை இணை இயக்குநர் ஆர்.பி.குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.