Published : 21 Oct 2014 08:28 AM
Last Updated : 21 Oct 2014 08:28 AM
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து பாஜக தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
நிதின் கட்கரியின் இல்லத்தில் சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாததால் அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 122 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை. இதைத்தொடர்ந்து 62 இடங்களில் வென்றுள்ள சிவசேனா உதவியுடன் ஆட்சியமைக்கலாமா எனவும் பாஜக ஆலோசித்து வருவதாகத் தெரி கிறது.
25 ஆண்டு கால நட்புக் கட்சி என்ற அடிப்படையில் மீண்டும் சிவசேனாவுடன் கைகோக்கலாமா என்று பாஜக யோசிப் பதாகத் தெரிகிறது. சிவசேனாவுடன் கூட்டணி என்பதில் பாஜக தலைவர்கள் பலரும் கருத்தொற்றுமையுடன் உள்ளனர். இந்துத்வ சக்தி என்ற அடிப்படையில் சிவசேனா கூட்டணியை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.
அதேசமயம், வெளியிலிருந்து ஆதரவு தரத் தயார் என 41 தொகுதிகளில் வென்ற தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ள போதும், தானாக முன்வந்து ஆதரவு தரும் தேசியவாத காங்கிரஸையும் பாஜக பரிசீலிப்பதாக தெரிகிறது.
ஹரியாணாவில் யார் முதல்வர்?
ஹரியாணாவில் ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள போதும் யார் முதல்வர் என்பதை பாஜக இன்னும் இறுதி செய்யவில்லை.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று ஹரியாணா பாஜக எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இக்கூட்டத்தில் பாஜக சட்டப்பேரவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அவரே முதல்வராகப் பொறுப்பேற்பார்.
தீபாவளிக்கு முன்பு முடிவு
தீபாவளிக்கு முன்பாக முதல்வர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு விடும் என ஹரியாணா மாநில பாஜக பொறுப் பாளர் ஜெகதீஷ் முக்தி தெரிவித் துள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்க மான மனோகர் லால் கட்டார் தேர்வு செய்ப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் கட்டார் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல. எனவே, ஜாட் சமூகத்தைச் சேர்ந்த கேப்டன் அபிமன்யு சிங்கின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பது குறித்து குழப்பம் நீடிக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு மும்பை செல்வதாக இருந்தது. அப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவசேனா காத்திருக்கும்: உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவின் கருத்துக்காக சிவசேனா காத்திருக்கும், இது தொடர்பாக நாங்களாக சென்று பாஜகவிடம் பேசமாட்டோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர் களிடம் கூறும்போது, “பாஜக எங்களிடம் ஆதரவு கோரினால் அதுகுறித்து பரிசீலிப்போம். மாநிலத்தில் நிலையான அரசு அமைவதற்காக எந்தவொரு பரிந்துரையையும் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் ஆதரவு தருவதாக கூறியபின், அவர்கள் வேண்டாம் என்றால்? எனவே காத்திருப்பதே சிறந்தது. அது மட்டுமின்றி, பாஜகவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. அக்கட்சியுடன் பாஜக செல்லவிரும்பினால் தாராளமாக செல்லட்டும்” என்றார்.
பாஜகவின் விருப்பம்: ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த நிர்வாகி எஸ்.எஸ்.பையாஜி ஜோஷி லக்னோவில் நேற்று நிருபர்களிடம் கூறும்போது, “பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க தேசியவாத காங்கிரஸ் முன்வந்துள்ளது. இதன் சாதக, பாதகங்களை ஆராய்ந்து முடிவு எடுக்கும் பொறுப்பை பாஜகவிடம் விடுவதே சிறந்தது. இது அரசியல் பிரச்சினை. எனவே, இதில் பாஜகதான் முடிவு எடுக்கவேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT