Published : 18 Oct 2014 08:30 AM
Last Updated : 18 Oct 2014 08:30 AM
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், அவருக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் மீண்டும் தேர்தலில் போட்டியிடவோ, முதலமைச்சர் பொறுப்பை வகிக்கவோ ஜெயலலிதாவுக்கு தகுதி உள்ளதா என்பது பற்றி மக்களிடம் பரவலாக விவாதம் எழுந்துள்ளது.
இது குறித்து சட்ட வல்லுநர்கள் சிலரிடம் கேட்டபோது, “ஜெயலலிதா குற்றவாளி என அறிவித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அந்த தீர்ப்பின் மூலம் அளிக்கப்பட்ட தண்டனை மட்டும்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜாமீனில் அவர் விடுதலை பெறலாம். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டால் அதன் பிறகு உடனடியாக தேர்தலில் போட்டியிடவும், முதலமைச்சர் பதவியை வகிக்கவும் ஜெயலலிதா தகுதி பெற்று விடுவார். எனினும் இப்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவால் அந்த தகுதியை பெற இயலாது” என தெரிவித்தனர்.
நீதிமன்றத்தால் எதற்காக தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது என்பதை அறிய பொதுமக்களில் பலர் ஆவலாக உள்ளனர்.
இது பற்றி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரசன்னாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
“விசாரணை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், அதன் பிறகும் கூட தான் குற்றவாளி அல்ல என்பதை மேல்முறையீடு மூலம் நிரூபணம் செய்வதற்கான வாய்ப்பை நமது குற்றவியல் நடைமுறைச் சட்டம் வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்திலும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வதற்கான உரிமை சட்டப்படி அவருக்கு உள்ளது.
கீழமை நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், சிறையில் சில காலம் தண்டனை அனுபவிக்கும் நிலையில், அதன் பிறகு மேல்முறையீட்டு விசாரணையில் அவர் நிரபராதி என தெரிய வரலாம். அப்போது அவர் விடுதலையாகி விடுவார். எனினும் நிரபராதியாக இருந்தும் கூட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவு தெரியும் வரை, அவர் சிறையில் இருக்க நேரிடும்.
நிரபராதியாக உள்ள ஒருவர் இவ்வாறு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, மேல்முறையீடு செய்வோருக்கு வழங்கப்பட்ட தண்டனயை நிறுத்தி வைக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 389-ல் தேவையான வழிகாட்டு தல்கள் வழங்கப்பட்டுள்ளன. விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு 3 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறை தண்டனை வழங்கும்போது, அந்தத் தண்டனையை நிறுத்தி வைத்து அவரை ஜாமீனில் விடுவிக்க அதே நீதிமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது. 3 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை விதிக்கப்படும் நிலையில், மேல்முறையீடு செய்வோருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை நிறுத்தி வைத்து, அவர்களை ஜாமீனில் விடுவிக்க உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் 389-வது பிரிவு அதிகாரம் வழங்கியுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 389-வது பிரிவின்படியே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தற்போது உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதோடு, அவரை ஜாமீனில் விடுதலை செய்யவும் உத்தரவிட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT