Last Updated : 19 Sep, 2014 08:26 PM

 

Published : 19 Sep 2014 08:26 PM
Last Updated : 19 Sep 2014 08:26 PM

மகாராஷ்டிராவில் கூட்டணி சிக்கல் நீடிப்பு: சிவசேனாவுடன் மீண்டும் பேச்சு நடத்த பாஜக விருப்பம்



மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான கூட்டணியில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், அக்கட்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க பாஜக விருப்பம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ல் நடக்கவுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது. சிவசேனா கட்சியுடன் தொகுதி உடன்பாடு குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.

பாஜகவுக்கு 119 சட்டப்பேரவை தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று சிவசேனா திட்டவட்டமாக தெரிவித்ததால், இரு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பாஜகவோ குறைந்தபட்சம் 119 தொகுதிகளை தமக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் எந்தக் கட்சியிலிருந்து முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் இழுபறி நீடித்து வருகிறது.

ஆனால், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு பாஜக முன்வந்துள்ளது. இது தொடர்பாக மும்பையில் இரு கட்சிகளை சேர்ந்த மூத்த தலைவர்களும் கூடி ஆலோசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மும்பையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார், "சிவ சேனாவுடன் கூட்டணி ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடர்கிறது. பாஜக என்றுமே கூட்டணி கட்சிகளைத் தக்க வைத்துகொள்ளவே விரும்புகிறது.

சரத் பவாரை பிரதமராக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்தபோதும் அவர்கள் கருத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் நியமனத்தின்போது சிவசேனா நிலைப்பாட்டை பாஜக ஏற்றுக்கொண்டது.

தற்போது பாஜக-வின் நோக்கம், மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதுதான். அதன்பிறகுதான் மற்ற பிரச்சினைகள் எல்லாம்.

மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளில் சிவசேனா வெற்றி பெறாத 59 தொகுதிகளும், பாஜக வெற்றி பெறாத 19 தொகுதிகளும் உள்ளன. எனவே ஒவ்வொரு தொகுதிவாரியாக பேச்சு நடத்த வேண்டும் என்ற விருப்பத்தை அவர்களிடம் தெரிவித்திருக்கிறோம்" என்றார்.

இதனிடையே, இரு கட்சிகள் இடையே மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்ட பிறகு, தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கப்படும் என்று சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளரும், எம்.பி-யுமான சஞ்ஜய் ராவத் கூறும்போது, "பாஜக என்ற கட்சி பிறப்பதற்கு முன்னதாகவே மகாராஷ்ட்ராவில், சிவசேனா அசைக்க முடியாத கட்சி என்ற பெயரை எடுத்தது.

சிவ சேனாவுக்கு தொகுதிகளை ஒதுக்கித் தந்துதான் பழக்கம், பெற்றுக் கொள்வதில் பழக்கம் இல்லை. மகாராஷ்ட்ராவுக்கு முதல்வர் சிவ சேனாவிலிருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x