Last Updated : 12 Nov, 2013 09:50 AM

 

Published : 12 Nov 2013 09:50 AM
Last Updated : 12 Nov 2013 09:50 AM

முல்லை பெரியாறு அணை தீர்ப்பு தாமதமாகும் - உச்ச நீதிமன்றம் தகவல்

தமிழகம் மற்றும் கேரளத்துக்கு இடையே நதிநீர் பங்கீடு விவகாரத்தில் நடந்து வரும் முல்லை பெரியாறு அணை வழக்கின் தீர்ப்பு தாமதமாகலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இவ்விரு மாநிலங்களுக்கிடையிலான நெய்யாறு அணை வழக்கு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது அதன் அமர்வு நீதிபதிகள் இந்த தகவலை தெரிவித்தனர்.

முல்லை பெரியாறை போல், தமிழகம் மற்றும் கேரளத்துக்கு இடையே கன்னியாகுமரிக்கு அருகில் இருக்கும் நெய்யாறு அணை நதிநீர் பங்கீடு விவகாரம், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி பருவ காலத்துக்கு ஏற்ப தமிழகத்துக்கு 2004-ம் ஆண்டிலிருந்து தண்ணீர் திறந்து விட கேரள அரசு மறுத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்த வழக்கு, நீதிபதி ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதி ஷிவ்கீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வினோத் பாப்டே, “இந்த வழக்கின் மீதான விசாரணை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக இருக்கிறது. ஒப்பந்தப்படி, கடந்த ஜூன் முதல் வரும் ஜனவரி மாதம் வரை சுமார் 150 கன அடி நீரை கேரளம் தர வேண்டி உள்ளது. எனவே, இந்த வழக்கில், தற்காலிக நிவாரணம் கிடைக்கும் வகையில் நீதிமன்றம் உடனடியாக ஒரு இடைக்கால உத்தரவினை இட வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இந்த ஒப்பந்தத்தில் பல விஷயங்கள் உள்ளதாகவும், இதை நன்கு ஆராய வேண்டி இருப்பதாகவும் கூறினர். மேலும், இந்த நதிநீர் பங்கீடு குறித்த ஒப்பந்தத்தின் கோப்புகளை இருமாநிலங்களும் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு ஆய்ந்து பார்க்க வேண்டும் எனவும், அதில் இருதரப்பினருக்கும் வரும் சந்தேகங்கள் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

இதன் பிறகு, கேரளம் மற்றும் தமிழக வழக்குரைஞர்கள், முல்லை பெரியாறு அணை வழக்கின் தீர்ப்பு எப்போது வெளியாகும் என நீதிபதிகளிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த நீதிபதி ஆர்.எம்.லோதா, இந்த வழக்கில் அதிகமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதன் தீர்ப்பு தாமதமாகலாம் என தெரிவித்தனர்.

நெய்யாறு வழக்கை போலவே முல்லை பெரியாறு அணை குறித்த வழக்கும் மிகப் பழமையானது. இது சம்மந்தமான வழக்கின் விசாரணை உட்பட அனைத்தும் கடந்த ஆகஸ்டில் முடிந்து, அது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு குறித்து இருமாநில வழக்குரைஞர்கள் கேட்டதன் காரணம், நெய்யாறை போல் நதிநீர் பங்கீடு குறித்த முல்லை பெரியாறு வழக்கையும் இதே நீதிபதிகளின் அமர்வு விசாரித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x