Published : 02 Apr 2017 04:27 PM
Last Updated : 02 Apr 2017 04:27 PM
காஷ்மீர் மாநிலத்தில் கட்டப் பட்டுள்ள நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில தேசிய நெடுஞ்சாலையில் 286 கி.மீ. தூரத்துக்கு 4 வழிப் பாதை அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தொடங்கப்பட்டது.
இந்தச் சாலையின் ஒரு பகுதியாக நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,500 கோடி செலவிடப் பட்டுள்ளது. தேசிய நெடுஞ் சாலை-44-ல் செனானி என்ற பகுதியில் இருந்து நஷ்ரி என்ற பகுதி வரை மொத்தம் 9.2 கி.மீ. நீளத்துக்கு இருவழி சுரங்கப்பாதை ஐந்தரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதையை ‘இன்பிராஸ் டிரக்சர் லீசிங் அண்ட் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் கட்டியுள்ளது.
இந்த சுரங்கப்பாதை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் 3 பேரும் திறந்த ஜீப்பில் சுரங்கப்பாதையில் சிறிது தூரம் பயணம் செய்தனர். அதன்பின் சுரங்கப்பாதையை கட்டிய பொறியாளர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சுரங்கப்பாதையால் ஜம்மு நகர் இடையே 31 கி.மீ. தூரம் குறைந்துவிடும். இது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுக்கும். மேலும், சுரங்கப்பாதையால் நாள்தோறும் ரூ.28 லட்சத்துக்கு எரிபொருள் மிச்சமாகும். நாட்டிலேயே மிக பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையால் காஷ்மீரில் சுற்றுலா துறை வளர்ச்சி பெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சுரங்கப்பாதை இமய மலையில் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதை அமைத்த தால் சாலைப் பணிகளுக்காக ஏராளமான மரங்கள் வெட்டு வது தவிர்க்கப்பட்டது. சுரங்கப் பாதையில் காற்றோட்டம், தீ தடுப்பு, சிக்னல்கள், தகவல் தொடர்பு மற்றும் மின்சாதனங்கள் அனைத்தும் தானாக இயங்கும் வகையில் இந்தியாவிலேயே முதலாவதாக உலகத் தரத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்தச் சுரங்கப்பாதையால் ஜம்முவில் இருந்து நகர் செல்ல 2 மணிநேரம் குறையும்.
மேலும், சுரங்கத்துக்குள் அதி நவீன கணினி அறையில் இருந்த படியே வாகனப் போக்குவரத்து கண்காணிக்கப்படும். இதற்காக 124 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இந்தப் பாதையில் மணிக்கு அதிகபட்சமாக 50 கி.மீ. வேகத்தில் செல்லலாம். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர்கள் சுரங்கப்பாதையில் செல்ல அனுமதி இல்லை. அவசர காலத்தில் உதவிகள் செய்ய தேவையான கருவிகளுடன் சிறப்பு குழு 24 மணி நேரமும் செயல்படும்.
காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு, நிலச்சரிவு போன்ற காரணங்களால் நெடுஞ்சாலை பல நாட்களுக்கு மூடப்படும். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து வந்தது.
இந்நிலையில் எல்லா பருவ நிலைக்கும் உகந்த வகையில் நவீன வசதிகளுடன் சுரங்கப்பாதை திறக்கப்பட்டு விட்டதால் இனி அந்தப் பிரச்சினைகள் இல்லாமல் போக்குவரத்து தடங்கலின்றி நடைபெறும். பொருளாதாரமும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT