Published : 30 Oct 2014 12:45 PM
Last Updated : 30 Oct 2014 12:45 PM
பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து, கேரள பாஜக அலுவலகத்துக்கு மர்ம கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நவம்பர் மாதம் தரிசனம் செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்த நிலையில், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.வி.ராஜேஸ் பெயருக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அந்தக் கடிதத்தில், "சபரிமலை தரிசனத்துக்காக கேரளா வரும் நரேந்திர மோடியின் தலையை துண்டிப்போம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன், சிரியாவில் ஐ.எஸ். அமைப்பால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஹெயன்ஸின் தலையின் மேல் பிரதமர் நரேந்திர மோடியின் தலை ஓட்டப்பட்ட விதத்தில் அனுப்பப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மன்னார் கிளை என்று அனுப்புனர் முகவரியில் எழுதப்பட்டிருந்தது. ஆனால், இந்த மிரட்டலை தங்களது இயக்கம் விடுக்கவில்லை என்று எஸ்.டி.பி.ஐ. திட்டவட்டமாக மறுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்த கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மக்கள் முன்னணி இயக்கத்தின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ. அமைப்பு கர்நாடகம், ஆந்திரா, தமிழகம், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக கேரளாவில் எஸ்.டி.பி.ஐ-க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT