Published : 31 Oct 2014 11:37 AM
Last Updated : 31 Oct 2014 11:37 AM

இலவச டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்த பணம் வசூலிப்பு: மின்வாரிய ஊழியர்கள் மீது புகார்

அனைத்து மாவட்டங்களிலும் நகரப் பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள சாதாரண மின் மீட்டர்களை அகற்றி, புதிய டிஜிட்டல் மீட்டர்கள் படிப்படியாக பொருத்தப்படும் என, கடந்த 2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் மின் மீட்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மின்சார வாரிய ஊழியர்கள், ஒரு மின் மீட்டர் பொருத்த ரூ.100 பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த ஞானமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் கூறியதாவது: ‘மின் மீட்டரை பொருத்துவதற்கு மின்வாரிய ஊழியர் கள் பணம் வசூலிப்பதால், ஏழைகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். மின்வாரிய உயர் அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு பணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு மின்வாரிய செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ‘அரசு உத்தரவின் பேரில், முதல் கட்டமாக நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த டிஜிட்டல் மின் மீட்டர்களை இலவசமாகவே பொருத்தி வருகிறோம். இதற்கு பொதுமக்கள் பணம் அளிக்க வேண்டாம். இது குறித்து பொதுமக்கள் எழுத்துபூர்வமாக புகார் அளித் தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x