Last Updated : 07 Apr, 2015 10:44 AM

 

Published : 07 Apr 2015 10:44 AM
Last Updated : 07 Apr 2015 10:44 AM

திருப்பதி வனப் பகுதியில் அத்துமீறி செம்மரம் வெட்டிய 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை

ஆந்திர போலீஸாரின் என்கவுன்ட்டருக்கு பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம்

ஆந்திர மாநிலம், திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் கடத்துவதற்காக செம்மரம் வெட்டிய தமிழக தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவத்தை தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடுமையாக கண்டித்துள்ளன. ஆந்திர மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்கள் வெட்டப்பட்டு தமிழகம், கர்நாடகம் போன்ற வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகின்றன. மேலும் கடல் வழியாக துபாய், சிங்கப்பூர், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் செம்மரம் கடத்தப்பட்டு வருகிறது.

வெளி நாடுகளில் செம்மரங்களுக்கு தேவை அதிகம் இருப்பதால் திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து பல்வேறு வாகனங்களில் செம்மரங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

வனத்துறையினரும், போலீஸாரும் கண்டு கொள்ளாமல் இருந்ததால் பல ஆண்டுகளாக இந்த கடத்தல் தொழில் கொடி கட்டி பறந்துகொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக செம்மரங்களை கடத்துவோர் மீது ஆந்திர அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழக - ஆந்திர எல்லைகள் மற்றும் ஆந்திர-கர்நாடக எல்லைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வனத்துறையினர், போலீஸாரின் கூட்டு நடவடிக்கை மூலம் பல கோடி ரூபாய் செம்மரங்கள் அவ்வப்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையால் செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். வனத்துறை சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு சேஷாசலம் வனப் பகுதியில் வனத்துறை அதிகாரிகளுக்கும் செம்மர கடத்தல் கும்பலுக்கும் இடையே நடந்த சண்டையில், வனத்துறை அதிகாரிகள் டேவிட், ஸ்ரீதர் ஆகியோர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆந்திர அரசு, செம்மர கடத்தல் கும்பலுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் ஆந்திர போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும், செம்மர கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த மாநில போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியான சந்திரகிரி மண்டலம் ஸ்ரீவாரி மெட்டு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செம்மரங் களை வெட்டுவதாக டிஐஜி காந்தாராவுக்கு தகவல் வந்துள்ளது. அவரது தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள ஈத்தலகுண்டா பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த தொழிலாளர் களுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே திங்கள்கிழமை காலை மோதல் ஏற்பட் டுள்ளது. அதிரடி போலீஸாரை கண்டதும் தொழிலாளர்கள் கோடாலி, கத்தி, நாட்டு துப்பாக்கிகளால் தாக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களை நோக்கி போலீஸார் சுட்டுள்ளனர். இந்த என்கவுன்ட்டரில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சீகடி குண்டா பகுதியில் செம்மர கடத்தல் கும்பல் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இங்கு 11 பேர் கொல்லப்பட்டனர்.

இரு சம்பவ இடங்களும் போர்க்களம் போல காணப்பட்டன. தமிழக தொழிலாளர் களின் சடலங்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வெட்டப்பட்ட செம்மரங்கள், கத்தி, கோடாலிகள் மண்ணில் புதைந்து கிடந்தன.

டிஐஜி காந்தாராவ் பேட்டி

இதுகுறித்து அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: செம்மர கடத்தல் கும்பல் எங்களை கண்டதும் சரமாரியாக ஆயுதங்களால் தாக்க தொடங்கினர். சரணடையுமாறு கூறியதை அவர்கள் கேட்கவில்லை. இதனால் வேறு வழியின்றி எங்களை காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது. இதில் மனித உரிமை மீறல் எங்கும் இல்லை என்று அவர் கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியபோது தப்பிச் சென்ற சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ஆந்திர மாநில போலீஸ் டிஜிபி ராமுடு, அதிரடிப்படை டிஐஜி காந்தாராவ் ஆகியோர் ஹெலிகாப்டர் மூலம் சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்தனர்.

என்கவுன்ட்டரில் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் அதிரடிப் படையினர் 8 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தை தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. ஆந்திர மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆந்திர முதல்வருக்கு ஓபிஎஸ் கடிதம்

ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் உள்ளதா என்பது குறித்து நம்பகமான, விரைவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். | >விரிவான செய்தி - தமிழக தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: மனித உரிமை மீறலை விசாரிக்க வலியுறுத்தி ஆந்திர முதல்வருக்கு ஓ.பி.எஸ். கடிதம் |

ஆந்திர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் ஆந்திர மாநில போலீஸ் 20 தொழிளார்களைச் சுட்டுக் கொன்றது பற்றி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. >| விரிவான செய்தி - 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை: ஆந்திர அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |

>தமிழக தொழிலாளர்கள் மீதான ஆந்திர போலீஸின் நடவடிக்கை, தமிழக தலைவர்களின் கண்டனங்கள் உள்ளிட்ட செய்திகளுக்கு - செம்மரக் கடத்தல் | ஆந்திர போலீஸ் நடவடிக்கை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x