Published : 18 May 2017 07:49 AM
Last Updated : 18 May 2017 07:49 AM
குடும்பப் பிரச்சினையால் தந்தையைப் பிரிந்து தாயுடன் வசிக்கும் மகளுக்கு எலும்பு புற்று நோய். இந்த நோயை குணப்படுத்த தந்தையின் அரவணைப்பும், பண உதவியும் தேவை. ஆனால் தந்தைக்கு தனது உடல்நிலை குறித்து தெரியப்படுத்த, அந்த 12 வயது மகள் உருக்கமாக “வாட்ஸ் அப்” மூலம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினாள். இதற்கு தந்தை செவி சாய்க்காததால் புற்றுநோய் தீவிரமாகி 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா துர்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சுமஸ்ரீ. இவர்களுக்கு சாய்ஸ்ரீ (12) என்ற மகள் இருந்தாள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக சிவக்குமார் தனது மனைவியை விட்டுப் பிரிந்தார். சாய்ஸ்ரீ தாயுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், துர்காபுரத்தில் உள்ள வீட்டை தனது மகள் பெயரில் எழுதி வைத்தார் சிவக் குமார். இதனிடையே, சில ஆண்டு களுக்கு முன்பு சாய்ஸ்ரீக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, அவளுக்கு எலும்பு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சாய்ஸ்ரீக்கு ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நிலைமை மோசமடைந்ததால், சாய்ஸ்ரீக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும், புற்றுநோயை கட்டுப்படுத்தவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வும் ரூ.30 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வளவு பணம் தாயிடம் இல்லை. மேலும், சாய்ஸ்ரீ பெயரில் உள்ள வீட்டை விற்க தந்தையின் கையெழுத்து தேவைப்பட்டது.
இதனால் கடந்த வாரம் சாய்ஸ்ரீ தனது தந்தைக்கு “வாட்ஸ் அப்” மூலம் வீடியோ ஒன்றைப் பதிவு செய்து அனுப்பி வைத்தார்.
அதில், “அப்பா என்னைக் காப்பாற்றுங்கள். எனக்கு மருத் துவம் பார்க்க உன்னிடம் பணம் இல்லை எனக் கூறுகிறாய் அல்லவா. ஆதலால் நீ எனக்காக எழுதி வைத்த வீட்டை விற்று விடலாம். நான் வாழ வேண்டும். என் நண்பர்களுடன் சேர்ந்து நான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். நான் நன்றாகப் படிக்க வேண்டும். நீ இந்த வீட்டை விற்று எனக்கு மருத்துவ செலவு செய்யாவிட்டால் நான் அதிக நாட்கள் உயிரோடு வாழ முடியாது அப்பா. தயவு செய்து என்னை வாழ வையுங்கள். இந்த வீடியோவைப் பார்த்த 3 நாட்களுக்குள் நீ என்னைக் காப்பாற்ற வர வேண்டும். அதற்காக ஆசையுடன் காத்திருக்கிறேன்”. இவ்வாறு அந்த வீடியோ பதிவில் சாய்ஸ்ரீ கூறியிருந்தார்.
மேலும், உறவினர்கள் யாராவது உதவி செய்ய முன்வர மாட்டார்களா எனும் ஏக்கத்தில் விஜயவாடாவில் உள்ள சிலருக்கும் இந்த வீடியோ பதிவு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வீடியோ ஆந்திரா முழுவதும் பரவியது. ஆனால், இறுதிவரை சாய்ஸ்ரீயின் தந்தை மகளைக் காப்பாற்ற வரவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். தந்தை சிவக்குமாரை சட்டப்படி தண்டிக்க வேண்டுமென தாய் சுமஸ்ரீ, விஜயவாடா போலீஸில் புகார் அளித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT