Published : 17 Nov 2013 06:42 PM
Last Updated : 17 Nov 2013 06:42 PM
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் வளர்ச்சிப் பாதையில் பயணித்த தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அழிவுப் பாதையில் பயணிக்கிறது என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடக மாநில பா.ஜ.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதில் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அனந்தகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்தக் கூட்டத்தில் மோடி பேசியதாவது: முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ராணுவ வீரனும், விவசாயியும் நாட்டிற்கு மிக முக்கியம் என்றார். அதனையே கொஞ்சம் மாற்றி ராணுவ வீரன், விவசாயி, விஞ்ஞானி மூன்று பேரும் நாட்டிற்கு மிக மிக முக்கியம் என்றார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவருடைய ஆட்சி காலத்தில் தான் அறிவியல்சார் துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது.
சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் செயற்கைகோள் ஏவ வேண்டும் என அவர் தீட்டிய திட்டம் தான் இப்போது சந்திரயானாகவும், மங்கள்யானாகவும் விண்ணில் பாய்ந்திருக்கிறது. அதேபோல தான் வாஜ்பாய் ஐடி துறையில் இந்தியாவின் தலைநகராக பெங்களூரை மாற்றினார். அவருடைய காலத்தில் ஐடி துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கப்பூர்வமான சீர்த்திரு த்தங்களால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெங்களூரில் வேலை கிடைத்திருக்கிறது.
வாஜ்பாய் காலத்தில் ஐடி துறையின் வளர்ச்சி விகிதம் 40 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் 9 சதவீதமாக குறைந்திருக்கிறது. நாட்டிலேயே முதன்முறையாக ஐடி துறைக்கென தனி அமைச்சரை நியமித்து வளர்ச்சிப் பாதையில் அழைத்து சென்றார் வாஜ்பாய். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தத் துறையை நசுக்கிக் கொண்டிருக்கிறது. ஐடி துறையின் திடீர் வீழ்ச்சியால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இழந்துள்ளார்கள்.
சதம் அடித்த வெங்காய விலை
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ரூபாயின் மதிப்பில் பாதாள வீழ்ச்சி என இந்தியப் பொருளாதாரத்தையே காங்கிரஸ் சீர்குலைத்துவிட்டது.
இந்த ஆண்டு வெங்காயத்தின் விலை சதமடித்தது. இப்படிப்பட்ட சூழலில் இந்திய குடிமகனின் சராசரி வருமானமான ரூ.26-ஐ வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? வெங்காயத்தின் விலை யைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், வரும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வப்போகிறது.
ஊழலில் மூழ்கிய காங்கிரஸ்
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய சாதனை என்னவென்றால் லட்சம் கோடிகளில் ஊழல். இந்த ஊழல்களை விசாரிக்க வேண்டிய சிபிஐ அமைப்பை தனது அரசியல் சுயலாபத்திற்கு காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் சிபிஐ-யின் துணையுடனே ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது.
ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
நாடு முழுவதும் பா.ஜ.க.விற்கு கிடைத்துவரும் வரவேற்பைக் கண்டு அச்சம் அடைந்துள்ள காங்கிரஸ் 1977-ஆம் ஆண்டு எமர்ஜென்ஸி காலகட்டத்தில் செய்ததைப் போல இப்போதும் செய்ய துடிக்கிறது. என்னைப்பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்களை மிரட்டுகிறது. தோல்வி பயத்தில் கருத்துக்கணிப்பு வெளியிட கூடாது என்கிறது. நான் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என கருத்து தெரிவிக்கும் லதா மங்கேஷ்கர் போன்ற பிரபலங்களை காங்கிரஸ் மிரட்டுகிறது என்றார் மோடி.
தனிநபர் விமர்சனம் இல்லை
தொழில் வளர்ச்சியின்மை, வேலையில்லா திண்டாட்டம், குஜராத்தின் சாதனை, இளைஞர்க ளின் நலன் குறித்தே மோடி அதிக நேரம் பேசினார். முந்தைய கூட்டங்களில் பேசியதைப் போல சோனியா, மன்மோகன், ராகுலை தாக்கிப் பேசவில்லை.
தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து இருந்ததால் மோடி அடக்கி வாசித்தார் எனக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT