Published : 27 Jul 2016 03:58 PM
Last Updated : 27 Jul 2016 03:58 PM

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு மனு செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் ஆயுள் தண்டனை விடுவிப்பு வழக்கில் மத்திய அரசை ஆலோசித்தால் மட்டுமே போதுமானது. மேலும் ஆலோசனை என்ற சொல் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதாக அர்த்தமாகாது என்று தமிழக அரசு தன் சீராய்வு மனுவில் வாதமிட்டுள்ளது.

டிசம்பர் 3, 2015 அன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பில் மத்திய புலனாய்வுக் கழக விசாரணையில் குற்றவாளிகள் என கோர்ட்டினால் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு என்பது மாநில அரசால் ஏகமனதாக தீர்மானிக்க முடியாது என்று கூறியிருந்தது.

இந்தத் தீர்ப்பினால் பிப்ரவரி 19, 2014-ல் தமிழக அரசு ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலையை முன்மொழிவு செய்து எழுதிய கடிதம் பயனற்று போனது.

அந்தக் கடிதம் குற்ற நடைமுறை சட்டப்பிரிவு 435-ன் படி ஆலோசனை என்ற இயல்பிலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கடிதத்திற்கு மத்திய அரசு பதில் அளிப்பதற்குப் பதிலாக அடுத்தநாளே, அதாவது பிப்ரவரி 20-ம் தேதியே விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.

அரசியல் சாசன அமர்வு கடிதத்தின் தகுதிகளை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை, மாறாக 3 நீதிபதிகள் அடங்கிய தனி அமர்வுக்கு இதை அனுப்பியது.

இதன் மீதான தீர்ப்பில் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி கலிபுல்லா ஆகியோர் கூறும்போது, பிரிவு 435-ம் படி ஆலோசனை என்ற சொல் ஒப்புதல் என்பதாகவே அர்த்தம் கொடுக்கிறது என்று கூறி தேசிய நலன் சார்ந்த விவகாரமாக இருப்பதால் வெறும் ஆலோசனை என்பது ஒரு வெறும் நடைமுறையாக மட்டும் ஏற்க முடியாது, அதற்கும் மேலானதாகவே பொருள் கொள்ள முடியும் என்று கூறினர்.

மேலும் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுதும் சிறையில் இருப்பதுதான் குறிப்பாக பயங்கரவாதக் குற்றங்களில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டால் தண்டனை 20, 30, 40 ஆண்டுகள் என்று சென்று கொண்டேயிருக்க வேண்டியதுதான், மன்னிப்பு கோர உரிமையல்ல என்பதே பொருள் என்பதை வலியுறுத்தினர். இத்தகைய மன்னிப்பு உரிமையற்ற நீண்ட கால சிறைத் தண்டனை நீட்டிப்பு பொதுநலன் சார்ந்தது என்பதால் அரசினால் தலையீடு செய்ய முடியாததாகும்.

நீதிபதி கலிஃபுல்லா தனது தீர்ப்பில், “ஒரு நபர் மற்றொருவரின் சுதந்திரத்தை நிரந்தரமாக அழித்து விட்ட நிலையில் அவருடைய குடும்பத்தின் சுதந்திரத்தையும் அச்சுறுத்தியுள்ள நிலையில் தன்னுடைய சுதந்திரத்துக்காக கோர்ட்டை நாடுவது சரியல்ல. சுதந்திரம் என்பது ஒருதலைபட்சமான கருத்தல்ல” என்றார்.

மேலும், திருந்தும் வாய்ப்பு என்பது தண்டனை குறித்த அச்சமில்லாமல் சாத்தியமில்லை என்றும் அவர் கடுமையாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆலோசனை என்பது ஒப்புதலுக்கான தேவையை வலியுறுத்தாது என்று எழுவர் விடுதலைத் தடையை மறுபரிசீலனை செய்ய சீராய்வு மனு செய்துள்ளது தமிழக அரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x