Published : 18 Oct 2014 04:20 PM
Last Updated : 18 Oct 2014 04:20 PM
வடகிழக்கு மாணவர்கள் மீதான வெறுப்பு ரீதியிலான குற்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்தார்.
பெங்களூரில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர்களை ஒரு கும்பல் கன்னடத்தில் பேசச் சொல்லி வற்புறுத்தி அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மைக்கேல் என்று மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கம்கோலன், ராக்கி கிப்கேன் ஆகிய 2 மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து வடகிழக்கு மாநில மாணவர்கள் சிலரை சந்தித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு நேரில் சந்தித்து பேசி, அவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வெறுப்பு ரீதியிலான குற்ற நடவடிக்கைகள் எங்கு நடந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியா ஜனநாயக கட்டமைப்பு கொண்ட நாடு. இங்கு எவர் மீது தாக்குதல் நடத்த மற்றவருக்கு உரிமை இல்லை. மணிப்பூர் மாணவர்கள் மீதான தாக்குதலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தாக்குதல் நடத்தியவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் எங்கும் வெறுப்பு நோக்கத்தை வளர விடக் கூடாது. வெறுப்புத் தன்மையை சகித்துக்கொள்ளவும் கூடாது. சமூகத்தில் அனைவரும் சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT