Published : 21 Dec 2013 03:54 PM
Last Updated : 21 Dec 2013 03:54 PM

செய்திக்குப் பணம்: தேர்தல் விதிமீறலாக அறிவிக்க மத்திய அரசுக்குப் பரிந்துரை

பணம் அளித்து செய்தி வெளியிடப்படுவதை தேர்தல் நடத்தை விதிமீறலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய சட்டத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

தேர்தல் நேரங்களில் பணம் அளித்து செய்தி வெளியிடப்படும் விவகாரம் அனைத்து தரப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஊடகங்கள், வேட்பாளர்கள், மக்கள் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செய்திகள் வெளியிடுவதற்கு பணம் அளிக்கப்படுவது தேர்தல் நடத்தை விதிமீறலாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த தவறை செய்பவர்களைத் தண்டிக்க முடியும்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு அரசு சார்பில் வெளியிடப்படும் சாதனை விளம்பரங்கள் நிறுத்தப்பட வேண்டும். எனினும் சுகாதாரம், வறுமை ஒழிப்பு, நுகர்வோர் நலன் உள்ளிட்ட துறைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம்.

அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, கட்சிகளின் நிதியை தணிக்கை செய்வது ஆகியவை குறித்து கவனம் செலுத்த வேண்டியது இப்போது அவசியமாகியுள்ளது.

குற்றப் பின்னணி உடைய வேட்பாளர்களை தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற சவாலான மாற்றங்கள் மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. தேர்தல் சீர்திருத்தங்கள் என்பது நெடுந்தொலைவுப் பாதை. வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது. வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று கூறுவது சாத்தியமில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது 30 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை. இந்தப் பின்னணியில் வாக்களிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றினால் 30 கோடி மக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியுமா? இதனால் நீதித் துறையின் பணிச்சுமைதான் அதிகரிக்கும். வாக்களிப்பதை கட்டாயமாக்க முடியாது என்றாலும் வாக்களிப்பது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அண்மையில் நடைபெற்ற 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார் வி.எஸ்.சம்பத்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: மக்களவையின் பதவிக் காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எங்கள் கடமையை நாங்கள் செவ்வனே செய்வோம். பொதுவாக பொதுத்தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்படும்.

கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்பட்டது என்றார். தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த சீர்திருத்தங்கள் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது இந்த கேள்வியை சட்ட அமைச்சர், எம்.பி.க்களிடம்தான் கேட்க வேண்டும் என்று வி.எஸ்.சம்பத் பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x