Published : 20 Dec 2013 01:45 PM
Last Updated : 20 Dec 2013 01:45 PM
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் என்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தத் தகவலை இன்று வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377-ன் கீழ், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
சட்டப் பிரிவு 377 குறித்து மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறும்போது, தனி நபரின் விருப்ப உரிமை காக்கப்படும் என நம்புவோம் என்றார்.
முன்னதாக, ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமற்றச் செயல் என்று டெல்லி உயர் நீதிமன்றம் 2009-ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு சமூக, மத அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது சட்டப்படி குற்றத்துக்குரிய செயல் என்று டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில், 'இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல். அதே சமயம், இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தி உரிய முடிவு செய்ய நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை நீக்க நாடாளுமன்றத்துக்குத்தான் உரிமையுள்ளது.
அதுவரை, இந்த குற்றத்துக்கான தண்டனை சட்டம் அமலில் இருக்கும். எனவே, இதுபோன்ற பாலியல் உறவை சட்டப்பூர்வமாக்க இன்றைய நிலையில் நீதிமன்றத்தால் இயலாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வகை செய்வது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT