Published : 18 Feb 2014 12:00 AM
Last Updated : 18 Feb 2014 12:00 AM
கச்சத்தீவை இலங்கையிடம் ஒப்படைத்தது முடிந்துபோன விவகாரம். அதை திரும்பப் பெறுவது சாத்தியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், இலங்கையிடம் மத்திய அரசு ஒப்படைத்த கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க வேண்டும். இலங்கையிடம் அந்த தீவை ஒப்படைத்தது அரசியலமைப்புச் சாசனத்துக்கு விரோதமானது. இதுபோன்று நமது நிலப்பகுதியை பிரித்து தருவதற்கு அரசியலமைப்புச் சாசனம் 368-வது பிரிவில் திருத்தம் கொண்டு வந்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பகுதி எதுவும் இலங்கைக்கு பிரித்துக் கொடுக்கப்படவில்லை. இந்தியாவின் இறையாண்மையையும் விட்டுக்கொடுக்கவில்லை. எனவே, கச்சத்தீவை மீட்பது (அல்லது திரும்பப் பெறுவது) என்ற கேள்வியே எழவில்லை.
கச்சத்தீவு விவகாரம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவுக்கும், சிலோனுக்கும் (இலங்கை) இடையே இருந்த பிரச்சினையாகும். அந்த கால கட்டத்தில் எல்லைப் பிரச்சினை இருந்தது. கச்சத்தீவு யாருக்கு என்பதில் சர்ச்சை இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சு நடத்தி 1974-ல் ஒப்பந்தம் ஏற்படுத்தி தீர்வு காணப்பட்டுவிட்டது. அந்த ஒப்பந்தத்தை மீண்டும் 1976-ம் ஆண்டில் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அரசியலமைப்புச் சாசன பிரிவுகளில் திருத்தம் கொண்டு வரத் தேவையில்லை. எனினும், அந்த ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. 37 ஆண்டுகள் கழித்து அரசியல் காரணத்துக்காக கருணாநிதி இந்த விவகாரத்தை எழுப்பி வருகிறார்.
இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு கடல் பகுதியில் (கச்சத்தீவு அருகே) மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை. கச்சத்தீவில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்க, விசா உள்ளிட்ட எந்தவிதமான பயண ஆவணங்களின்றி செல்வதற்கு மட்டுமே இந்திய மீனவர்களுக்கும், பக்தர்களுக்கும் உரிமை உள்ளது.
சிறையில் 39 மீனவர்கள்
இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிப்பதற்காக அத்துமீறி நுழைந்த 39 மீனவர்கள் அந்நாட்டு சிறையில் உள்ளனர். இவர்களைத் தவிர போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 14 இந்தியர்கள், இலங்கை சிறையில் உள்ளனர். இந்திய மீனவர் நலன்களை பாதுகாப்பதில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. இது தொடர்பாக மனுதாரரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவை மீட்பது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவுக்கும், இதே போன்ற பதிலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT