Published : 07 Jul 2016 10:00 AM
Last Updated : 07 Jul 2016 10:00 AM
தெலங்கானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த முதிய வருக்கு இந்து சம்பிரதாயப்படி முஸ்லிம் பெண் இறுதி சடங்கு செய்து வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டம், ஹன்ம கொண்டா பகுதியில் ஆதரவற் றோர்களுக்கான முதியோர் இல்லத்தை யாகூ பீவி எனும் முஸ்லிம் பெண் நடத்தி வருகிறார். இங்கு வசித்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
முன்னதாக கடைசி நேரத்தில் தனக்கு இந்து சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடத்தி வைக்கும்படி யாகூ பீவியிடம் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் முதியவரின் மகனிடம் யாகூ பீவி தகவல் தெரிவித்தார். ஆனால் அவர் வேறு மதம் மாறிவிட்டதால் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடியாது என கூறியுள்ளார்.
இதையடுத்து யாகூ பீவி முதியவரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் தானே முன்னின்று இந்து சம்பிரதாயப்படி இறுதி சடங்கு நடத்த முடிவெடுத்தார். அதன்படி முதியோர் இல்லத்தில் இருந்து ஹன்ம கொண்டா இடுகாடு வரை முதியவரின் சடலத்துடன் முன்னால் தீச்சட்டி ஏந்தி நடந்து சென்றார்.
பின்னர் இடுகாட்டில் இந்து முறைப்படி அனைத்து சடங்கு களையும் யாகூ பீவி செய்து வைத்து அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘‘முதியவர் கடந்த 2 ஆண்டுகளாக என்னுடைய பராமரிப்பில் இருந்து வந்தார். எனது தந்தையாகவே அவரை பாவித்தேன். இதன் காரணமாகவே மதத்தை மறந்து அவரது மகளாக இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்து வைத்தேன். இது என்னுடைய கடமை மட்டுமல்ல, மனிதாபிமானமும் கூட” என்றார்.
இந்து முறைப்படி முதியவருக்கு இறுதி சடங்கு நடத்தி வைத்த யாகூ பீவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT