Published : 06 Oct 2014 11:23 AM
Last Updated : 06 Oct 2014 11:23 AM
எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய எல்லையில் அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர், 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்: "எல்லையில் அத்துமீறுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் இப்போது அரசியல் நிலைமை மாறிவிட்டது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் எல்லை நிலவரத்தை அரசு தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது. எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் டி.கே.பதக்குடன் தொடர்பு கொண்டு ஆர்னியா பகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்தேன். எல்லைப் பகுதிக்கு டி.கே.பதக் விரைந்துள்ளார்" என்றார்.
காங்கிரஸ் கண்டனம்:
பாகிஸ்தான் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி கூறியதாவது: "பாகிஸ்தன் அத்துமீறல் கண்டனத்துக்குரியது. இத்தகைய செயல்களை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவது அந்நாட்டு நல்லதல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், "பக்ரீத் திருநாளன்று இத்தகைய செயலலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருக்கிறது. இதைவிட மோசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
11 முறை தாக்குதல்:
அக்டோபர் மாதம் தொடங்கிய முதலே பாகிஸ்தான் அத்துமீறல் அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 11 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி குல்மார்க் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு சிறுமி கொல்லப்பட்டார், 6 பேர் படுகாயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT