Published : 30 Jun 2016 05:00 PM
Last Updated : 30 Jun 2016 05:00 PM
வடகிழக்கு டெல்லியின் சீமாபுரி பகுதியைச் சேர்ந்தவர் மெகபூப். மெக்கானிக்கான மெகபூப், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது வீட்டின் இரு அறைகளுள் ஒன்றை வாடகைக்கு விட்டிருந்தார். அதில், ஒரு பெண் குடியிருந்தார். அவர் தன்னை விதவை என அறிமுகம் செய்து கொண்டிருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு, மெகபூபின் 6 வயது மகன் சோனு காணாமல் போனான். அங்கு குடியிருந்த அப்பெண்தான் அச்சிறுவனைக் கடத்தியுள்ளார். அப்பெண் பற்றிய எந்த தகவலும் தெரியாததால், போலீஸாராலும் சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சோனு கடத்தப்பட்டு 7 ஆண்டு கள் ஆகிவிட்டதால் மெகபூப் குடும் பத்தினர் நம்பிக்கை இழந்துவிட்ட னர். இந்நிலையில் கடந்த மே 18-ம் தேதி வங்கதேசத்தைச் சேர்ந்த மூஸா என்பவர், மெகபூபை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகனைக் கண்டுபிடித்து விட்டேன் எனக் கூறியுள்ளார்.
“என் மகன் கிடைத்துவிட்டான் என்ற வார்த்தைகளைக் கேட்டு, என் காதுகளை என்னாலேயே நம்ப முடியவில்லை. இதைச் சொன்ன மூஸா எங்களுக்கு எப்போதுமே தேவதூதன்தான்” என்கிறார் மெகபூப்.
சிறுவன் சோனுவைக் கண்டு பிடித்தவர் ஜமால் மூஸா. வங்க தேசத்தைச் சேர்ந்த மெக்கானிக். இவர் டாகா அருகே உள்ள கிராமத்தில் ஒரு வீட்டுக்கு வேலைக்குச் சென்றார். அப்போது 13 வயது சிறுவன் சோனுவை அந்த வீட்டுப் பெண் மிக மோசமாக நடத்துவதைப் பார்த்தார்.
அச்சிறுவனிடம் விசாரித்த போதுதான், அவன் டெல்லியில் இருந்து கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை அதிகாரிகளிடம் தெரிவித்த மூஸா, டெல்லிக்குச் சென்று சோனுவின் பெற்றோரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
பின்னர் சோனுவின் தந்தை மெகபூப், மூஸா இருவரும் தொலைக்காட்சி செய்தி நிறுவனங் களைத் தொடர்புகொண்டு, காவல் துறையையும் அணுகினர். பின் இவ்விவகாரம் வெளியுறவுத் துறை கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே வங்கதேசம் திரும்பிய மூஸாவுக்கு சிக்கல் காத்திருந்தது. சோனுவைக் கடத்தி வைத்திருந்த பெண், மூஸா மீது அத்துமீறல் புகார் செய்திருந்தார். இதனால் மூஸா ஒரு மாதம் வரை சிறையில் இருக்க நேரிட்டது.
எனினும், சோனுவை அவனது பெற்றோரிடம் சேர்ப்பிக்கும் முயற்சியில் இருந்து மூஸா பின்வாங்கவில்லை. மூஸாவின் முயற்சி, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் முயற்சியால் சோனு நேற்று காலை பெற்றோரிடம் சேர்ப்பிக்கப்பட்டான்.
சோனு 7 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரிடம் இணைந்துள்ளான். 2016-ம் ஆண்டு ரம்ஜான் மெகபூபின் குடும்பத்துக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT