Published : 11 Oct 2014 12:14 PM
Last Updated : 11 Oct 2014 12:14 PM
கிராமங்களை எம்.பி.க்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
‘எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை’ கடந்த சுதந்திர தின விழாவின்போது பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்திட்டத்தை சுதந்திரப் போராட்ட தலைவர் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் 112-வது பிறந்த தினமான நேற்று பிரதமர் மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவை களில் உள்ள 790 எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எம்.பி.க்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு கிராமத்தையும் தத்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவரின் சொந்த ஊராகவோ, நெருங்கிய உறவினர்களின் ஊராகவோ இருக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “இந்த திட்டத்தின் கீழ் எனது தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவுள்ளேன். எம்.பி.க்கள் அனைவரும் தலா 3 கிராமங்களை தத்தெடுத்தால், 2019-ம் ஆண்டு இறுதிக்குள்ள சுமார் 2,500 கிராமங்கள் வளர்ச்சி பெற்றவையாக இருக்கும்.
மாநில அளவிலும் எம்.எல்.ஏ.க்களை மையப்படுத்தி இதே போன்றதொரு திட்டத்தை செயல்படுத்தினால், 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கிராமங்கள் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. ஒரு வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமம் முன்னேற்றமடைந்தால், அதைப் பின்பற்றி அப்பகுதியில் உள்ள மற்ற கிராமங்களும் வளர்ச்சியின் பாதையில் அடியெ டுத்துவைக்கும்.
மக்களின் பங்களிப்பு
நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ததில், மக்களின் பங்களிப்பு இருந்தால்தான் கிராமங்கள் முன்னேற்றமடையும் என்பதை கண்டுணர்ந்துள்ளேன். இது வெறுமனே நிதி சார்ந்த திட்டம் அல்ல; மக்களின் பங்களிப்பு சார்ந்த திட்டமாகும்.
காந்தியின் கொள்கைகள் எனக்கு ஊக்க சக்திகளாக இருக்கின்றன. வெறுமனே மின் கம்பிகளை கிராமங்களுக்கு கொண்டு செல்வதால் வெளிச்சம் வராது. வாழ்வியல் மதிப்பீடுகளை செம்மைப்படுத்துதல், ஒரே குழுவாக இணைந்து செயல் படுதல், நல்ல கல்வி உள்ளிட்ட வற்றை அளித்தால்தான் கிராமங்கள் ஒளிரும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் காந்தி செயல்பட்டார்.
மாற்றங்களை திடீரென என்னால் ஏற்படுத்திவிட முடியும் என்று நான் கூறவில்லை. காலம் செல்லச்செல்ல மாற்றங்கள் சாத்தியமாகும். மக்களுக்கு நல்ல அரசியல் கிடைக்கச் செய்வதற்கான முயற்சியாக இந்த திட்டம் உள்ளது. இந்த மாற்றத்துக்கு ஊக்கமளிக்கும் வகையில் எம்.பி.க்கள் செயல்படுவார்கள்.
அரசின் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப் பட்டாலும், ஒவ்வொரு மாநிலத் திலும் ஒருசில கிராமங்கள் மட்டும் முன்மாதிரியாக, மிக அதிகமான வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இதற்கு காரணம், அந்த கிராமத்தின் மீது அக்கறை செலுத்திய அப்பகுதி தலைவர்களும், மக்களும்தான். இதை அடிப்படையாக வைத்துத் தான் எம்.பி. மாதிரி திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
இதுவரை டெல்லி, லக்னோ போன்ற நகரங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பிற பகுதிகளில் படிப்படியாக அமல் படுத்தப்படும் போக்கு கடைப் பிடிக்கப்பட்டது. இந்த முறை மாற்றப்படும். அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT