Last Updated : 26 Feb, 2015 08:34 AM

 

Published : 26 Feb 2015 08:34 AM
Last Updated : 26 Feb 2015 08:34 AM

ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கு: பவானி சிங் செயல்பாட்டில் உள்நோக்கம்- கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் 34-வது நாளாக நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் பவானிசிங்,''இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகிவரும் எனக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அலுவலகம் வழங்கவில்லை. இதனால் வழக்கு தொடர்பான பணிகளை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு தேவையான வசதிகள் அடங்கிய தனி அறை ஒதுக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதி குமாரசாமி கர்நாடக மாநில அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரை அழைத்து விசாரித்தார். அப்போது அவர், ''இவ்வழக்கில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வருவது தொடர்பாக கர்நாடக அரசுக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை. கர்நாடக அரசு பவானிசிங்கை அரசு வழக்கறிஞராக நியமிக்கவில்லை. எனவே அவருக்கு தனி அலுவலகம் வழங்கவில்லை. இருப்பினும் இது தொடர்பாக பவானிசிங் கர்நாடக அரசுக்கு முறைப்படி கடிதம் எழுதினால், அவரது கோரிக்கை குறித்து பரிசீலிப்போம்'' என்றார்.

இதையடுத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவின் சுமார் 400 பக்க வாக்குமூலத்தை வாசிக்க தொடங்கினார்.

''ஜெயலலிதாவின் பணத்தையும் சொத்துகளையும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பயன்படுத்தியுள்ளனர். மூவரும் ஜெயலலிதாவின் வீட்டில் தங்கி இருந்து, அவருக்கு பினாமியாக செயல்பட்டனர். இதேபோல சுதாகரன், இளவரசியும் 1991-96-ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் பணத்தை பயன்படுத்தியுள்ளனர்'' என குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ''ஜெயலலிதாவின் வீட்டில் மூவரும் தங்கியிருந்ததால் பினாமிகள் என கூறுகிறீர்கள். ஆனால் பினாமி சட்டப்படி ரத்த உறவு அல்லாதோர் பினாமி ஆக முடியாது என கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து மூவருக்கும் இடையே பணப்பரிவர்த்தனை நடைபெற்றதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு 1991-க்கு முன்பே வாங்கப்பட்டுள்ளது. அதனை ஏன் சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்த்துள்ளீர்கள்? ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து சசிகலாவுக்கு எவ்வளவு பணம் சென்றுள்ளது? எந்த சொத்துகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதா மீது ரூ.66.65 கோடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என வழக்கு தொடுக்கப்பட்டது?'' என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

இதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார்.

இதனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி சம்பந்தம், ''ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் ரூ.66.65 கோடிக்கு சொத்துக்குவித் தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போயஸ் கார்டன் வீடு 1991-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டி ருந்தாலும், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ரூ.7.5 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அதனால்தான் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது'' என்றார்.

அதற்கு நீதிபதி,' 'ஜெயலலிதா மீதான‌ வழக்கில் நீண்ட காலமாக அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் உங்களுக்கு (பவானிசிங்) எந்த தகவலும் தெரியாமல் இருப்பது ஏன்? இவ்வழக்கின் அடிப்படைத் தன்மை கூட தெரியாமல் எப்படி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வாதாடினீர்கள்? நீதிமன்றத்தின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லாமல் மவுனமாக இருப்பது ஏன்?

இவ்வழக்கில் குற்றவாளிகள் தரப்பும் எவ்வித ஆதாரமும் தாக்கல் செய்து வாதிடவில்லை. அரசு தரப்பும் ஆதாரங்களை சுட்டிக்காட் டாமல், வெறுமனே வாக்கு மூலத்தை வாசிக்கிறீர்கள். இதை வைத்துக்கொண்டு வழக்கை விசாரிக்க முடியாது. அரசு வழக்கறிஞரின் இந்த செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது'' என கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போதும் பவானிசிங் மவுனமாக இருந்தார்.

இறுதியாக அரசு வழக்கறிஞர் பவானிசிங், ''எனக்கு இறுதிவாதம் செய்ய ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும். அப்போது தான் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியும்'' என்றார். அதனை ஏற்க மறுத்த நீதிபதி குமாரசாமி, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வியாழக்கிழமைக்கு (இன்று) ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x