Published : 18 Nov 2013 08:37 AM Last Updated : 18 Nov 2013 08:37 AM
பொய்களை புனைந்து உண்மைகளை திரிக்கிறார்: மோடி மீது மன்மோகன் தாக்கு
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக பொய்களைப் புனைந்து, உண்மைகளைத் திரித்துக் கூறுகிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் குற்றம்சாட்டினார்.
மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் ஜபல்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் அவரைக் கடுமையாக விமர்சித்தார்.
கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது: அரசியல் கட்சிகளிடம் ஆரோக்கியமான போட்டி இருப்பது ஜனநாயகத்துக்கு வலுவூட்டும். எனினும் அந்தப் போட்டி ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும். பிரசாரத்தின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்னவெல்லாம் செய்வோம் என்பதைப் பட்டியலிட்டு கூறலாம். அதில் தவறில்லை. ஆனால், பாஜக தலைவர்களின் ஆர்வம் வேறுவிதமாக உள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதை மட்டுமே அவர்கள் விரும்புகின்றனர். எதிர்மறை, பிரிவினையை கொள்கையாகக் கொண்டு பாஜக செயல்படுகிறது. இதன்படி கடந்த சில மாதங்களாக எதிர்மறையான அரசியலை பார்த்து வருகிறோம். இதனால் அரசியல் நாகரிகம் மிகவும் தரம் தாழ்ந்து போய்விட்டது.
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவர்களை அவதூறாகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். அதற்காக வரலாற்று உண்மைகளை திரிக்கிறார். பல்வேறு பொய்களைப் புனைந்து பேசுகிறார். குஜராத் வளர்ச்சியை முன்மாதிரியாகப் பின்பற்றுவோம் என்று பாஜக தலைவர்கள் தம்பட்டம் அடித்துப் பேசுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முன்மாதிரி திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் நிச்சயமாகப் பொருந்தாது. பொதுவாக ஒரு பகுதியில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட திட்டம் மற்ற பகுதிகளில் தோல்வியடையும். முதல்வர் சிவராஜ் சிங் செளகான் தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்திய பிரதேசம் பின்தங்கியுள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களைவிட இங்கு அதிகமாக உள்ளது. பெண்கள் எழுத்தறிவு சதவீதம் மிகக் குறைவாக உள்ளது என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.
WRITE A COMMENT