Last Updated : 30 Apr, 2017 05:14 PM

 

Published : 30 Apr 2017 05:14 PM
Last Updated : 30 Apr 2017 05:14 PM

உள்நாட்டுப் பாதுகாப்பில் தொடர் தோல்வி

பாஜக கூட்டணி அரசின் ஆட்சிப் புத்தகம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிப் புத்தகத்தைப் போலவே இருக்கிறது. “கோழைத்தனமானது நயவஞ்சகமானது - தேசவிரோத மானது - கொடூரமானது” என்று தாக்குதல் சம்பவம் நடந்த பிறகு விமர்சனங்களை வெளியிடு வதில் ஒற்றுமை; கோபமாக சுட்டுரையில் கருத்துகளைத் தெரிவித்த பிறகு உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை, உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று சூளுரை, தர்மசங்கடத்தை அதிகப்படுத்தும் வகையில் இந்த வாரம் பஸ்தார் மாவட்டத்தில் நடந்ததைப்போல என்றால் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் இறுதிச் சடங்கில் பங்கேற்று மலர் வளையம் வைப்பது என்று உள்நாட்டுப் பாதுகாப்பில் மோடி அரசின் செயல்பாடும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்ததைப்போலவே தொடர்கிறது. பஸ்தாருக்குப் பிறகு காஷ்மீரில் குப்வாரா..

யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு எல்லை தாண்டிச் சென்று பயங்கரவாதிகளின் முகாம்களைத் தாக்கியதாகக் கூறிக்கொள்ளும் ஒன்றைத் தவிர, வேறு எதிலும் மாற்றமே இல்லை. முதுகெலும்பில்லாத அரசு என்று காங்கிரஸை வசைபாடியவர்களும் அப்படியேதான் செயல் படுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் இதே போல நடந்த தாக்குதலுக்குப் பிறகு வளையல்களை அனுப்பி வைத்தார் ஸ்மிருதி இரானி.

மும்பையில் பயங்கரவாதிகளுக்கும் கமாண்டோக்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்தபோதே, அன்றைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி அதற்கு அருகில் இருந்த ஓபராய் ஹோட்டலுக்குச் சென்று தங்கினார். மோடியின் நெஞ்சுரத்தைச் சுட்டிக்காட்டி, பிரதமர் மன்மோகன் சிங், சிவராஜ் பாட்டீல், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரை எல்லோரும் அப்போது எள்ளி நகையாடினர்.

உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு முதுகெலும்பே கிடையாது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.

டெல்லியில் பட்லா அவுஸ் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் முஹாஹிதீன் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி இரு வேறு முகங் களைக் காட்டியது, சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள்தான் காங்கிரஸுக்கு இலக்கு என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அந்த மோதலில் இறந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, இறப்புக்குப் பிறகு வழங்கப்படும் உயரிய விருதான அசோக சக்கரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ‘அது சண்டையல்ல, போலி மோதல்’ என்று அழுத்தம்திருத்தமாகப் பலமுறை கூறி யாரையோ திருப்திப்படுத்த முயன்றார்.

மாவோயிஸ்ட்களுக்கு எதிராக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையான நடவடிக்கை களை எடுத்ததன் விளைவாக அவர்களுடைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் இருவர் உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர்; காங்கிரஸ் கூட்டணி அரசு அதை அப்படியே தொடர அச்சப்பட்டது. மாவோயிஸ்ட்களுடன் இணைந்து செயல்பட்டதால் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளான டாக்டர் விநாயக் சென், மத்திய திட்டக்குழுவின் துணைக் குழுவில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். காங்கிரஸ் கூட்டணி அரசு இப்படி விமர்சனங்களுக்கு அஞ்சியும் வாக்கு வங்கியை மனதில் கருதியும் மாற்றி மாற்றிச் செயல்பட்டு கெட்ட பெயரைச் சம்பாதித்தது.

மோடி பதவிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகிறது. அவருடைய ஆட்சியில் உள்துறை நிர்வாகம் எப்படி இருக்கிறது? 2014-ல் மோடி பிரதமரானபோது காஷ்மீர் அமைதியாக இருந்தது, இப்போது பற்றி எரிகிறது.

இப்போது இருப்பதைப்போன்ற மோசமான சூழல் இதற்கு முன்னால் ஏற்பட்டதே இல்லை. முப்தி முகம்மது சய்யீதின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஆட்சியமைப்பது என்ற துணிகர முடிவால் நன்மை ஏற்படுவதற்குப் பதிலாக, எதிர்ப்பும் வன்முறையும் அதிருப்தியுமே நிலவுகிறது.

மாவோயிஸ்ட் ஆதிக்கப் பகுதியில் சில முன்னேற்றங்களை மோடி அரசு ஏற்படுத்தியது. ஆனால் கடைசியாக நடந்துள்ள இரு மோதல்களும் உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத் திறமையின்மையைத்தான் அதிகம் பறைசாற்றுகின்றன. காலை 11 மணிக்கு சாலை போடும் பணியிலிருந்தவர்களை மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் வந்து சுட்டதுடன், காவலுக்கு நின்ற மத்திய ரிசர்வ் போலீஸாரைக் கொன்று குவித்து ஆயுதங்களையும் முக்கியக் கருவிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மாநில உளவுப்பிரிவு போலீஸின் திறமைக் குறைவையும், நன்கு திட்டமிட்டு காவலை மேற்கொள்ளாத ரிசர்வ் போலீஸ் படையின் மெத்தனத்தையுமே இத்தாக்குதல் உணர்த்து கிறது. மத்திய போலீஸ்படை வைத்திருந்த நவீன துப்பாக்கிகள், இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகளை வீச உதவும் லாஞ்சர்கள், அதிவேக அலைவரிசை ரேடியோ சாதனங்கள், குண்டு துளைக்காத கவச உடைகள் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

போதாக்குறைக்கு, தங்களால் கொல்லப்பட்ட வீரர்களின் முகங்களையும் உடல்களையும் சிதைத்துச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். மத்திய போலீஸ் படை தலைமையகம் இதை மறுத்தாலும், இதைக் காட்டும் காணொலிக் காட்சிகள் இப்போது எல்லோரிடமும் பரவியிருக்கின்றன. தேசப் பாதுகாப்பில் தங்களை யாரும் மிஞ்ச முடியாது, தேச விரோதிகளைக் கடுமையாக ஒடுக்குவோம் என்று மார்தட்டிய கட்சியின் ஆட்சியில்தான் இந்தத் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடைபெறுகின்றன.

காஷ்மீர், சத்தீஸ்கர் மட்டுமல்ல நாகாலாந்திலும் நெருக்கடி முற்றிக் கொண்டிருக்கிறது. மணிப்பூர் எல்லை மாவட்டங்களில் முன்பைவிட இப்போது ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன.

2014 மே மாதம் மோடி பிரதமராவதற்கு முன்னால் நாட்டின் பாதுகாப்பு மோசமாகிவிட்ட இடங்களை சிவப்புக் குறிகளால் அடையாளப்படுத்திவிட்டு, இப்போது அப்படியுள்ள பகுதிகளை அதே போல சிவப்புக் குறியீட்டால் மோடி அதைப் பார்த்து பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. குருதாஸ்பூர், பதான்கோட், யூரி ராணுவ முகாம்களைத் தாக்குதலிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டு பிறகு துல்லியத் தாக்குதல் நடத்திய பெருமை அடங்குவதற்குள்ளாக அடுத்த தாக்குதல்கள் தொடர்கின்றன.

காஷ்மீரத்தில் நிலைமை மோசமானதற்கான பழியை பாகிஸ்தான், வளரும் மதவாதம், கல்வீசும் இளைஞர்கள் மீது சுமத்திவிடலாம். ஆனால் இந்த உத்தி ஆபத்தானது, தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாதது. குப்வாராவில் ராணுவ முகாம் மீது இப்போது தாக்குதல் நடந்திருக்கிறது. காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது ஓரளவுக்கு சாதகமான பலனைக் கூடத் தரலாம்.

ஆனால் மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு துணை நிலை ராணுவ வீரர்களை இப்படி பலி கொடுப்பது நாட்டு மக்களிடையே அதிருப்தி, கோபம், வெறுப்பு ஆகியவற்றையே வளர்க்கும். உள்நாட்டுப் பாதுகாப்பில் மோடி அரசு தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வருகிறது. மாற்று உத்தி ஏதும் இல்லை. இது தொடர்ந்தால் வாக்காளர்கள் அரசுக்கு வளையல்களை அனுப்ப மாட்டார்கள், தங்களுடைய கோபத்தை வாக்குச்சாவடியில் போய் காட்டுவார்கள்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com தமிழில் சுருக்கமாக: ஜூரி





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x