Last Updated : 27 Nov, 2013 12:00 AM

 

Published : 27 Nov 2013 12:00 AM
Last Updated : 27 Nov 2013 12:00 AM

தேஜ்பால் கைதுக்குத் தடை விதிக்க மறுப்பு

பாலியல் புகாரில் சிக்கியுள்ள தருண் தேஜ்பால் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரின் முன்ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணை தொடர்கிறது.

இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி சுனிதா குப்தாவின் முன் வந்தது. தெஹல்காவின் முன்னாள் நிறுவனர் மற்றும் ஆசிரியரான தருண் தேஜ்பால் சார்பில் வழக்கறிஞர்கள் கே.டி.எஸ்.துளசி மற்றும் கீதா லூத்ரா ஆகியோர் ஆஜராயினர். அப்போது துளசி, ’இந்த வழக்கு அரசியலாக்கப்படுவதால், எங்களுக்கு இடைக்காலத் தடை பெற உரிமை உள்ளது. எனவே, இந்த முன் ஜாமீன் மனுவின் மீதான விசாரணை முடியும் வரை மனுதாரரின் கைதுக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த கோவா போலீசார், ’குற்றவாளி மீது எழுந்திருப்பது மிகவும் கடுமையான புகார் என்பதால் அதை ஏற்க முடியாது’ என எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி போலீசும் மறுப்பு தெரிவிக்கவே, தேஜ்பாலின் கைதுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும், தேஜ்பாலின் மனுவுக்கான பதிலை இன்று தாக்கல் செய்யும்படி கோவா போலீசுக்கு உத்தரவிட்ட நீதிபதி சுனிதா, வழக்கை மறுநாளுக்கு ஒத்தி வைத்தார.

இந்தப் புகாரின் மீது தொடக்கத்தில் ’மன்னிப்பு’ கேட்ட தேஜ்பால், தன் முன் ஜாமீன் மனுவில் அதைக் குறிப்பிடவில்லை. மாறாக, ஐந்து நட்சத்திர விடுதியின் லிப்டில் முதல் நாளில் இருவருக்கு இடையே நடந்தது ஒரு விளையாட்டான சம்பவம் எனவும், மறுநாளும் அந்தப் பெண் பத்திரிகையாளர் பாதிக்கப்படும் அளவிற்கு ஒன்றும் நடைபெறவில்லை எனவும் பல்டி அடித்துள்ளார்.

தன் மீது கோவாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் உத்தரவின் பேரில், தேவையில்லாத ஆர்வத்தின் பேரில் தானாக முன் வந்து பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அது எனவும் புகார் தெரிவித்து, வழக்கைத் திசை திருப்ப தேஜ்பால் முயல்வதாகக் கூறப்படுகிறது. இவர் மீது கோவா காவல்துறை ஐபிசி 376, 376(2) மற்றும் 354 ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 22 ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், நீதிபதி விஷாகா அறிக்கையின் பேரில் தெஹல்கா நிர்வாகம் சார்பில் அமைக்க முயலும் விசாரணைக் குழுவில் உறுப்பினராவதற்கு சமூக ஆர்வலர்கள் மறுத்து விட்டதாக தெஹல்கா அலுவலக வட்டாரம் கூறுகிறது. தெஹல்காவில் பணியாற்றிய மற்றொரு பெண் பத்திரிகையாளரான ராணா அயூப் என்பவரும் ஷோமாவின் நடவடிக்கையை எதிர்த்து ராஜினாமா செய்துள்ளார்.

வெளிநாடு செல்ல கட்டுப்பாடு

தருண் தேஜ்பால் வெளிநாடு தப்பிச் சென்றுவிடாமல் இருக்கும் பொருட்டு அனைத்து குடியுரிமை சோதனைச்சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

“அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் அதுகுறித்து அவர் காவல்துறையிடம் கட்டாயம் தெரிவித்தாக வேண்டும்” என கோவா காவல்துறை டிஐஜி மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x